வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவருடன் அடுத்த வாரம் சந்திப்பு: அதிபர் டிரம்ப்

2 mins read
00cef2c2-b91b-4008-93b9-9f3ba35b0d9e
விரைவில் நாடு திரும்பவுள்ளதாக வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ திங்கட்கிழமை (ஜனவரி 5) தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை அடுத்த வாரம் சந்திக்கப் போவதாக வியாழக்கிழமை (ஜனவரி 8) ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் நடந்த நேர்காணலில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவருடன் திரு டிரம்ப் நடத்தப்போகும் முதல் சந்திப்பாக அது அமையும்.

“அவர் அடுத்த வாரம் நாடு திரும்பப்போவதாக நான் அறிகிறேன். அவருடனான சந்திப்பதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்,” எனவும் அந்த ஊடகப் பேட்டியில் அதிபர் டிரம்ப் கூறினார்.

சந்திப்புக் கூட்டம் குறித்த மேல் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

திருவாட்டி மரியா கொரினா மச்சாடோ வெனிசுவேலாவின் நாடாளுமன்றத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையில் உறுப்பினராக இருந்தவர். அந்நாட்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிட்ட அவருக்கு 59 வயதாகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பல்லாண்டுகளாகச் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியதற்காக நோபெல் அமைதிப் பரிசை வென்றவர் ஆவார்.

அதிபர் டிரம்ப்பிடம் தாம் இதுவரை பேசியதில்லை என்று அவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் அரசியல் எதிர்காலம் தற்போது தெளிவாக இல்லை. அண்மையில் திருவாட்டி மச்சாடோவுடன் பணியாற்றும் யோசனையை அதிபர் டிரம்ப் தட்டிக் கழித்தார். அந்நாட்டில் அவருக்கு ஆதரவோ, மரியாதையோ இல்லை என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிகெஸ் தலைமையில் செயல்படும் வெனிசுவேலாவில் தேர்தல் நடத்த சிலகாலம் தேவைப்படும் என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.

“நாட்டை நாம் மறுநிர்மாணம் செய்யவேண்டும். தேர்தலை எப்படி நடத்துவது என்பதே அவர்களுக்கு இப்போது தெரியாது,” எனவும் திரு டிரம்ப் கூறினார்.

எண்ணெய் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் செய்யும் நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்றாகும். ‘ஒபெக்’ என்ற எண்ணெய் வளநாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக விளங்கும் வெனிசுவேலா, அமெரிக்காவுக்கு உடனடியாக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய்யை விற்க வேண்டும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் எண்ணெய் அதிகாரிகளை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) சந்திக்கவுள்ளார். அந்த அதிகாரிகளின் நிறுவனங்கள், வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையின் மேம்பாட்டுக்கு முக்கிய அங்கம் வகிக்கும்.

அவை $128.5 பில்லியன் (US$100 பில்லியன்) அந்நாட்டு எண்ணெய் மறுநிர்மாணத்துக்கு முதலீடு செய்யவுள்ளன என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்