வாஷிங்டன்: வெனிசுவேலாவின் 50 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பெறப்படும் $3.59 மில்லியன் (US$2.8 பில்லியன்) மதிப்புள்ள எண்ணெய் சந்தை விலையில் விற்கப்பட்டு, இருநாடுகளும் பலனடையும் வகையில் பகிரப்படும். மேலும் அந்த எண்ணெய் விற்பனையில் பெறப்படும் வரவு தமது நேரடிப் பார்வையில் இருக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏறத்தாழ 30 முதல் 50 நாள்களில் வெனிசுவேலா உற்பத்தி செய்யக்கூடிய எண்ணெயின் மொத்த அளவை அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
வெனிசுவேலாவின் தலைவர் நிக்கலாஸ் மதுரோவை சிறைப்பிடித்துள்ள அமெரிக்கா அந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த தன்னிச்சையான செயல், வெனிசுவேலாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுவேலாவின் தகவல், எண்ணெய் அமைச்சுகள் கேள்விகளுக்கு எவ்வித விளக்கமும் வழங்கவில்லை. அமெரிக்க எரிசக்தித் துறையும் வெள்ளை மாளிகையும் கருத்துரைக்கவில்லை.
உலகின் ஆக அதிக கச்சா எண்ணெய் இருப்புகளை வைத்திருக்கும் நாடாக வெனிசுவேலா இருந்தாலும் அதன் உற்பத்தி முறையாக செயல்படவில்லை. பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. அதன் ஆட்சியாளர்களும் அதன் கட்டமைப்புகளை சரிவர நிர்வகிக்கவில்லை. அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி உலக அளவில் ஒரு விழுக்காடே தற்போது உள்ளது.
அமெரிக்கா, வெனிசுவேலாவின் தற்காலிகத் தலைவரான டெல்சியை கச்சா எண்ணெய் சார்ந்த வர்த்தகச் செயல்பாடுகளில் அமெரிக்காவுக்கு சாதகமான முறையில் நடந்தகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வெனிசுவேலா கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதிபர் டிரம்பின் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

