ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள வாகன நுழைவு அனுமதிச் சீட்டு (விஇபி) நிலையங்களில் சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று வெறுப்படைந்த காலம் முடிந்துவிட்டது.
அதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்த அந்த இடம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ஓட்டுநர்கள், தங்களுடைய கார்களுக்கான விஇபி ஒட்டுவில்லைகளை டங்கா பே, இஸ்கந்தர் புத்ரியில் உள்ள சன்வே பிக் பாக்ஸ் ஆகிய நிலையங்களில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுகொள்ள முடியும். 2024 அக்டோபரில் விஇபி அறிமுகப்படுத்தப்பட்டபோது வாகனமோட்டிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
மலேசியாவால் நியமிக்கப்பட்ட அனுமதி வில்லைகளை விநியோகிக்கும் நிறுவனமான ‘டிசிசென்ஸ்’, பெரும்பாலான வாகனமோட்டிகள் விஇபிக்கு விண்ணப்பித்துவிட்டதாகவும் அவர்களுடைய கார்களில் ‘ஆர்எஃப்ஐடி’ வில்லை வெற்றிகரமாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாளுக்கு 1,500 முதல் 1,700 வரையிலான கார்களுக்கு அனுமதி வில்லைத் தரப்பட்டதாக அது குறிப்பிட்டது.
2025 ஜனவரி, பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 300க்கும் 400க்கும் இடையே குறைந்துள்ளது.
“பெரும்பாலான வாகனமோட்டிகள் விஇபிக்கு விண்ணப்பித்து அனுமதி வில்லைகளைப் பெற்றுவிட்டனர். ஆனால் விஇபி இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாததால் சில வாகன ஓட்டிகள் அவசரம் காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதுள்ள நிலவரத்தை பயன்படுத்தி ஒட்டுநர்கள் தங்களுடைய வாகனத்திற்கு ஒட்டுவில்லையை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறோம்,” என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல்கட்ட அமலாக்க நடவடிக்கைக்குப் பிறகு மலேசிய அதிகாரிகள் அதனை கட்டாயப்படுத்தாததால், விஇபிக்கு விண்ணப்பிக்கப்படுவதை ஒத்தி வைத்துள்ளதாக சில சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024 மே மாதத்தில், மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அக்டோபர் 1, 2024 முதல் விஇபி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
விஇபி இல்லாமல் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனத்தை ஓட்டுவோருக்கு 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அக்டோபர் 4ஆம் தேதியன்று, விஇபி இல்லாத வாகன ஓட்டிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அனுமதி வில்லை இல்லாதவர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறும்போது எச்சரிக்கப்படுவார்கள் என்றும் அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு அவர்களுக்கு நினைவூட்டப்படும் என்றும் அமைச்சர் ஆண்டனி லோக் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.