பெய்ஜிங்: சீனாவில் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்திடமிருந்து 7.9 மில்லியன் யுவான் (S$1.48 மில்லியன்) வழங்கப்பட்டதாக நீதிமன்றப் பதிவுகள் தெரிவித்தன.
செய்யாத கொலைக்காக 29 அண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட டான் சியூயி என்பவருக்கு ஏறக்குறைய 4.4 மில்லியன் யுவானும், அதனால் உளவியல் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு மேலும் 3.5 மில்லியன் யுவானும் இழப்பீடாக வழங்கப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை இல்லாத அளவில் டான் 10,683 நாள்களைச் சிறையில் கழித்தார். அவரது வழக்கு சீனாவில் தவறாகக் குற்றம் சாட்டப்படும் பிரச்சினையைக் கோடிகாட்டுகிறது.
மற்றொரு சம்பவத்தில் ஸாங் யுஹுவான் என்பவர் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்ததாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விடுவிக்கப்பட்டார்.