ஆசியான் வட்டார அமைப்புக்குத் தலைமைத் தாங்கும் மலேசியா, திங்கட்கிழமை (மே 26) உச்சநிலை மாநாடு தொடங்கும் முன்னரே வெற்றிக்கனிகளைப் பறித்துவிட்டது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
வர்த்தகம், அமெரிக்க வரி விதிப்புச் சூழலில் வட்டாரத்தின் ஒருமித்த செயல்பாடு, ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பு போன்ற அம்சங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்று திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் - மலேசியா - வியட்னாம் ஆகிய நாடுகளை இணைக்கும் எரிசக்திக் கட்டமைப்பு உறுதியாகிவிட்டது என்ற அவர், நிலப்பகுதியிலும் கடலடியிலும் கம்பிவடங்களை விரைவாக அமைப்பதே அடுத்த பணி என்றார்.
கிழக்கு மலேசிய மாநிலமான சரவாக்கிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதே இந்தக் கட்டமைப்பின் நோக்கம். அம்மாநிலம் 2035ஆம் ஆண்டுக்குள் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்ளளவை மும்மடங்கு உயர்த்தி, 15 கிகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு கொண்டுள்ளது.
அங்கு உற்பத்தி செய்யப்படும் எரிசக்தியை இந்தக் கட்டமைப்பின்மூலம் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இரு தனித்தனிக் கம்பிவட வழிகள் அமைக்கப்படவுள்ளன. அவை மேற்கு மலேசியா அல்லது சிங்கப்பூரில் முடிவடையும்.
அதன் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் எந்த வழித்தடம் முதலில் முடிவடையுமோ அதை ஏற்பதாகவும் திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட வட்டார ஊடகங்களுடனான சிறப்பு நேர்காணலின்போது அவர் இவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சரவாக்கிலிருந்து சிங்கப்பூருக்கு எரிசக்தியைக் கொண்டுவர அமைக்கப்படும் கம்பிவடங்கள் இந்தோனீசியக் கடற்பரப்பைக் கடந்து வரவேண்டியுள்ளது. மலேசியத் தீபகற்பம் வழியே கம்பிவடங்கள் அமைக்கப்பட்டாலும் சிங்கப்பூருக்குச் செல்லவேண்டிய எரிசக்தி அளவு உறுதிசெய்யப்பட்டு உடன்பாடு செய்துகொள்ள முடியும் என்று திரு அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2031ஆம் ஆண்டுக்குள் ஒரு கிகாவாட் எரிசக்தியைச் சரவாக்கிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்துக்கொள்ள இருதரப்பும் உடன்பாட்டை முன்னரே எட்டியுள்ளன.
வட்டார ரீதியிலான கம்பிவட அமைப்புக்குப் பெரிய அளவிலான முதலீடு தேவை. அதற்கு கிட்டத்தட்ட $981 பில்லியன் செலவாகும் என ஆசியான் தலைமைச் செயலாளர் கவ் கிம் ஹோர்ன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
ஆசியான் தலைமைத்துவ நாடாக மலேசியா சில அம்சங்களில் பெரிய அளவில் முன்னேற்றங்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் மிகுந்த துடிப்புடன் செயல்பட்டுவரும் மலேசியா, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை கடந்த ஏப்ரல் மாதம் வரவேற்றது. ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமர் லீ சியாங் பங்கேற்கிறார்.
மியன்மார் விவகாரத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் தடையின்றி மியன்மாரைச் சென்றடையவும் சண்டை நிறுத்த உடன்பாட்டை நீட்டிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.