கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் படங்கள் கொண்ட 32 நொடிகள் காணொளி குறித்து புகார் அளிக்கப்பட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
@DATUKZULKARNAIN77 என்ற டிக் டாக் கணக்கு வழி காணக்கூடிய அந்தக் கணொளி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் பெரும்பாலும் அது மோசடி தொடர்பானது என்றும் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் திரு ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
“மலேசியர்களுக்கு நிதி உதவி குறித்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உரையாற்றுவதைப் போன்று காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை எதிர்கொள்வோர் ‘திரு ஸுல்கர்னாயின்’ என்ற ஆடவரைத் தொடர்புகொள்ளும்படியும் மாமன்னர் கூறுவதாகக் காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
காணொளியில் வரும் தகவல் பொய்யானது என்று காவல்துறை வலியுறுத்துவதாகக் கூறிய திரு இசா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்பு, பல்லூடக சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.