ஹாங்காங்: ஹாங்காங்கில் ஏழு உயர்மாடிக் குடியிருப்புக் கட்டடங்களில் 159 பேர் உயிர்களைப் பறித்த மோசமான தீ விபத்து தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராகக் ‘கலகம் செய்யத் தூண்டும்’ காணொளிகளை இணையத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படும் 71 வயது ஆடவரை தேசியப் பாதுகாப்புக் காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 6) கைதுசெய்தது.
நவம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் தீச்சம்பவம் தொடர்பில், தேசியப் பாதுகாப்புக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள முதல் கைது நடவடிக்கை இது.
தேசியப் பாதுகாப்பு விசாரணையின் ஒரு பகுதியாக டிசம்பர் 2ஆம் தேதி அந்த ஆடவரை விசாரணைக்குத் தான் அழைத்ததாகக் கூறிய காவல்துறை, கைதானவரின் அடையாளத்தை வெளியிடவில்லை.
விசாரணையின்போது கலந்துரையாடப்பட்ட அனைத்து விவரங்களையும் அந்த ஆடவர் பொறுப்பின்றி சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாகக் காவல்துறை கூறியது.
சீன, ஹாங்காங் அரசாங்கங்களுக்கும் ஹாங்காங் நீதித்துறைக்கும் எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் பல்வேறு காணொளிகளை அந்த ஆடவர் பதிவேற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தத் தீவிபத்துக்குப் பிறகு ஹாங்காங்கிற்குச் சீனா வெளிப்படுத்திய ஆதரவு ‘ஒருவகையான நடிப்பு மட்டுமே’ என அந்த ஆடவர் வர்ணித்ததாக ஹாங்காங் காவல்துறையின் தேசியப் பாதுகாப்புத் துறை தலைமைக் கண்காணிப்பாளர் ஸ்டீவ் லி கூறினார்.

