பத்து மில்லியன் ஊழியர்களுக்கு ‘ஏஐ’ பயிற்சி வழங்க வியட்னாம் இலக்கு

பத்து மில்லியன் ஊழியர்களுக்கு ‘ஏஐ’ பயிற்சி வழங்க வியட்னாம் இலக்கு

1 mins read
36d2bb32-39b2-4132-bf95-a65b132b3730
தகுதியும் நிபுணத்துவமும் மிக்க 10,000 ஏஐ வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் வியட்னாம் இலக்கு கொண்டுள்ளது. - கோப்புப்படம்: வியட்னாம் நியூஸ்
Google News Preferred Icon

ஹனோய்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மனிதவள மேம்பாடு தொடர்பான தேசியத் திட்டத்தின்கீழ், 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 10 மில்லியன் ஊழியர்களுக்கு அடிப்படை ‘ஏஐ’ திறன்களைக் கற்பிக்க அல்லது மேம்படுத்த வியட்னாம் இலக்கு வகுத்துள்ளது.

துணைப் பிரதமர் லே தியென் சாவ் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒப்புதல் அளித்த அந்தத் திட்டம், உத்திசார் தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான ஊழியரணியை உருவாக்குவதையும் தேசியத் தொழில்நுட்பத் தற்சார்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதியும் நிபுணத்துவமும் மிக்க 10,000 ஏஐ வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதையும் அத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. அடிப்படைத் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்து, தேர்ச்சி பெறக்கூடிய, முக்கிய ஏஐ பணிகளை முன்னின்று நடத்தக்கூடிய குறைந்தது 1,500 வல்லுநர்களும் அவர்களில் அடங்குவர்.

அந்த இலக்குகளை அடைவதற்கு, நிறுவனங்களை மேம்படுத்துதல், ஏஐ வல்லுநர்களை உருவாக்குதல், ஏஐ கல்வியை விரிவுபடுத்துதல், மறுதிறன் பயிற்சி அளித்தல், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையுடன் பயிற்சிகளை இணைத்தல், உள்கட்டமைப்பு, தரவு மற்றும் நடைமுறைப் பயிற்சிச் சூழல்களை உருவாக்குதல் ஆகிய பணிகளில் அத்திட்டம் கவனம் செலுத்தும்.

2035ஆம் ஆண்டிற்குள் ஏஐ மனிதவள மேம்பாட்டுத் திறனில் இவ்வட்டார முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ வியட்னாம் இலக்கு வகுத்துள்ளதாகவும் உள்ளூர்ச் செய்தித்தாளில் வெளியாகியுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்ஏஐமனிதவளம்