தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரியை எதிர்கொள்ள இறக்குமதி வரியைக் குறைக்கிறது வியட்னாம்

2 mins read
ecf7f978-0807-416a-8c66-72a60af47031
வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகம் சார்ந்திருக்கும் வியட்னாமின் ஆகப் பெரிய சந்தையாகக் கடந்த ஆண்டு அமெரிக்கா இருந்தது. - படம்: புளூம்பர்க்

ஹனோய்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அனைத்துலக அளவில் அறிவிக்கப்படவிருப்பதை முன்னிட்டு கார்கள், பெட்ரோலியம், ஒருசில வேளாண் பொருள்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கான வரிகளை வியட்னாம் குறைத்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இன்னும் கூடுதலான இறக்குமதிகளை ஊக்குவிக்க, வியட்னாம் அதன் வரிகளை மறுஆய்வு செய்வதாகப் பிரதமர் பாம் மின் சின் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) அறிவித்தார்.

ஒரு சில கார்களின் இறக்குமதி வரிகள் பாதியாகக் குறைக்கப்படும். பெட்ரோலியத்துக்கான வரி விகிதத்தையும் வியட்னாம் ஐந்திலிருந்து இரண்டு விழுக்காட்டுக்குக் குறைக்கவிருக்கிறது.

உறைந்த கோழிக் கால்களுக்கான வரி 20 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காட்டுக்கும் பிஸ்தா பருப்புக்கான வரிகள் 15லிருந்து 5 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படவிருக்கிறது.

தன் மீதான அமெரிக்க வரி விதிப்பை மட்டுப்படுத்த வியட்னாம் ஆன அனைத்தையும் செய்வதாகப் பொருளியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

திரு டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் வரி விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) கூறினார். இருப்பினும் வர்த்தகப் பங்காளிகள்மீது இரக்கம் காட்டப்போவதாக அவர் திங்கட்கிழமை (மார்ச் 31) சொன்னார்.

வியட்னாமும் கடந்த வாரம் திரு இலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் அதன் ஸ்டார்லிங் துணைக்கோள இணையச் சேவையின் முன்னோட்டத் திட்டத்துக்கு அனுமதி வழங்கும் என்று தெரிவித்தது. அது 2030ஆம் ஆண்டிறுதி வரை நீடிக்கும்.

பொருளியல்-வர்த்தக-முதலீட்டு உறவுகளில் அமெரிக்காவுக்கு இருக்கும் தற்போதைய அக்கறைக்குரிய விவகாரங்களை மும்முரமாக வியட்னாம் ஆராய்வதாகப் பிரதமர் சின் சொன்னார்.

மிகப் பெரிய உற்பத்தி தளமான வியட்னாம், வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகம் சார்ந்திருக்கிறது. சென்ற ஆண்டு அதன் ஆகப் பெரிய சந்தையாக இருந்தது அமெரிக்கா.

பல அமெரிக்க நிறுவனங்கள் வியட்னாமில் அவற்றின் தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றன. அமெரிக்கச் சந்தையில் கால் பதிக்க சீன நிறுவனங்களும் வியட்னாமைப் பயன்படுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்