ஹனோய்: வியட்னாமின் பொருளியல் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆறு விழுக்காட்டுக்கும் அதிகமாக வளர்ச்சி கண்டதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்துலக உற்பத்தி மையமாக விளங்கும் வியட்னாமில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 6.4% வளர்ச்சி பதிவானது. 2023ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.7% வளர்ச்சி பதிவானதாக பொது புள்ளிவிவர அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
விநியோகச் சங்கிலிகள், அந்நியச் செலாவணிச் சந்தை, பொது முதலீடு போன்ற கூறுகளை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இந்த முன்னேற்றம் தெரிவதாகக் கூறப்படுகிறது.
இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் மேன்மேலும் விரிவடையச் செய்யவும் உற்பத்தி மற்றும் செயலாக்கம், தளவாடம் மற்றும் விருந்தோம்பல் ஆகிய முக்கியமான துறைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2024ன் முதல் ஆறு மாதங்களில் வியட்னாமின் ஆகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி மூலம் வியட்னாம் $190 பில்லியன் அமெரிக்க டாலர் (S$255.6 பி.) ஈட்டியது. ஆண்டு அடிப்படையில் இது 14.5% ஏற்றமாகும்.
இதற்கிடையே, பொருளியல் மேலும் வளர்ச்சிகாண, புதிய சீர்திருத்தத் திட்டங்கள் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

