பேங்காக்: வியட்னாமில் நடப்புக்கு வரவுள்ள புதிய இணைய விதிமுறைகளுக்குக்கீழ் ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவேண்டும்.
வரும் புதன்கிழமை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தன்று நடப்புக்கு வரும் புதிய சட்டம், கம்யுனிஸ்ட் நாடான வியட்னாமில் பேச்சு சுதந்திரத்தை மேலும் பறிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய சட்டத்தின்கீழ் வியட்னாமில் இயங்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பயனர்களின் தகவல்களைக் கொண்ட தரவுகளை சேகரிப்பது கட்டாயமாகும். அதிகாரிகள் கேட்கும்போது அத்தகவல்கள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
சட்டவிரோதமான பதிவுகள் என்று அரசாங்கம் வகைப்படுத்தும் பதிவுகள் 24 மணிநேரத்துக்குள் அகற்றப்படவேண்டும்.
புதிய சட்டம், டிக்ரீ 147 (Decree 147) என்றழைக்கப்படுகிறது. அது, அந்நாட்டில் 2018ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த இணையப் பாதுகாப்புச் சட்டத்தை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது.
அந்த இணையப் பாதுகாப்பு சட்டத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை கடுமையாக விமர்சித்தன. அந்த சட்டம், சீனா மேற்கொள்ளும் அடக்குமுறை இணையத் தணிக்கையைப்போல் இருப்பதாக இணைய சுதந்திரத்துக்குக் குரல் கொடுப்போர் கண்டனம் தெரிவித்தனர்.
வியட்னாம் அரசாங்கம், பொதுவாக எதிர்ப்புக் குரலை அடக்குவது, தங்களை எதிர்ப்பவர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்போருக்கு இது பொருந்தும்.
கடந்த அக்டோபர் மாதம், யூடியூப் தளத்தில் கிட்டத்தட்ட 120,000 ஆதரவாளர்களைக் (followers) கொண்டிருந்த வலைப்பதிவாளரான டுவோங் வான் தய் என்பவருக்கு 12 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரசாங்கத்தை விமர்சித்து அடிக்கடி நேரலைகளைப் பதிவுசெய்த அவர் மீது, தேசத்துக்கு எதிரான தகவல்களைப் பதிவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.