யாகி புயல்: வியட்னாமில் மாண்டோர் எண்ணிக்கை 254ஆக அதிகரிப்பு, மியன்மாரில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

2 mins read
9425d9d3-f28c-4a86-bdf8-4209162c17f0
மியன்மாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: யாகி புயல் காரணமாக வியட்னாமில் மாண்டோர் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை வியட்னாமிய அதிகாரிகள் செப்டம்பர் 13ஆம் தேதியன்று வெளியிட்டனர்.

நிலச்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாகப் பலர் மாண்டதாக அவர்கள் கூறினர்.

820க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் பலரை இன்னும் காணவில்லை என்றும் வியட்னாமின் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

செப்டம்பர் 10ஆம் தேதியன்று வியட்னாமின் வடக்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திடீர் வெள்ளம் கரைபுரண்டோடியது.

41 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாக அறியப்படுகிறது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 46 பேர் மாண்டுவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் சுத்தமான குடிநீர், சுகாதாரப் பராமரிப்பு போன்றவை இல்லாது அவர்கள் சிரமப்படுவதாகவும் ஐநாவின் குழந்தை நலப் பிரிவு கூறியது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உடனடி உதவி வழங்க கிட்டத்தட்ட 15 மில்லியன் அமெரிக்க டாலர் (S$19.47 மில்லியன்) தேவைப்படுவதாக அது தெரிவித்தது.

தலைநகர் ஹனோயில் வெள்ளம் வடிந்து வருவதாகவும் சில பாலங்கள் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் வியட்னாமிய அரசாங்கம் கூறியது.

இதற்கிடையே, மியன்மாரிலும் யாகி புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 230,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவம் வெளிநாடுகளிடமிருந்து உதவி கோரியுள்ளது.

மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் தலைநகர் நேப்பிடோவும் அடங்கும்.

வெள்ளம் காரணமாக மியன்மாரில் குறைந்தது 33 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீடுகளை இழந்து தவிப்போருக்காகத் துயர்துடைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்