வன்முறை வெறுப்பையும், புதிய நெருக்கடிகளையும் உருவாக்கும்: சீனா

வன்முறை வெறுப்பையும், புதிய நெருக்கடிகளையும் உருவாக்கும்: சீனா

2 mins read
இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை: சீனா
81696354-78bf-48e7-930e-f8c1c3844157
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. - படம்: இபிஏ

பெய்ஜிங்: மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ள தாக்குதல்கள் வெறுப்பையும் புதிய நெருக்கடிகளையுமே உருவாக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரித்துள்ளார்.

அதோடு சீனாவுடனான கருத்துவேறுபாடுகளை அமெரிக்கா களைந்து, முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டுமென்று அறைகூவல் விடுத்தார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த 14வது தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத் தொடருக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்துரைத்தார்.

“இந்தப் போர் நடந்திருக்கவே கூடாது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. ஈரான் உள்ளிட்ட வளைகுடா வட்டாரத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு மீறப்படாமல் மதிக்கப்பட வேண்டும்,” என்று திரு வாங் யி வலிறுத்தினார்.

ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்து, மோதல் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தவிர்க்க சீன வெளியுறவு அமைச்சர் போரில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

“வலிமை என்பது நீதியாகாது. அப்பாவி மக்கள் போரினால் பாதிக்கப்படக்கூடாது,” என்றும் திரு வாங் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ‘உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியை’ செயல்படுத்தவும், வட்டார ஒழுங்கை மீட்டெடுக்கவும், மக்களுக்கு அமைதியையும் நிலைத்தன்மையையும் வழங்கி உலக அமைதிக்குப் பங்களிக்க சீனா தயாராக இருப்பதாக திரு வாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்னும் சில வாரங்களில் சீன அதிபர் ஸீ ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரின் உச்சநிலை சந்திப்பு இடம்பெறுவது பற்றிய கருத்தையும் திரு வாங் யி விவரித்தார். அந்த இரண்டு தலைவர்கள் மேற்கொள்ளும் நல்லுறவு அமெரிக்க சீன நாடுகளின் இருதரப்பு உறவையும் நிலைப்படுத்த உதவியுள்ளது என்றார் திரு வாங்.

தேதி வெளியிடப்படாத அந்த மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்படக்கூடிய சாத்தியத்தையும் குறிப்பிட்ட திரு வாங், அவ்விருவரும் சந்திக்கவிருப்பது மனநிறைவை அளிக்கிறது என்றார்.

குறிப்புச் சொற்கள்