நியூயார்க்: அமெரிக்காவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெற்றோர், ஒரு காலத்தில் வழக்கமாகப் போடப்பட்டுவந்த வைட்டமின் கே ஊசிகளை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அதனால், அந்த ஊசி எதைத் தடுக்க உருவாக்கப்பட்டதோ, அந்த உயிருக்கே ஆபத்தான ரத்தக்கசிவு பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, அந்த ஊசியைப் பெறாத கைக்குழந்தைகளின் விகிதம் 2017ல் பதிவான 3.1 விழுக்காட்டிலிருந்து ஒரு மடங்குக்கும் மேலாக 2025ல் 6.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அந்த வைட்டமின் ஊசியைப் பெறாத குழந்தைகளுக்கு 6 மாதங்கள் ஆவதற்குள் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக இருந்தது. இதில் மூளை, இரைப்பைக் குடல் பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவும் அடங்கும்.
தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பொதுச் சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஐயங்கள் அதிகரித்துவரும் வேளையில், அந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
வைட்டமின் கே என்பது ஒரு தடுப்பூசி இல்லை என்றாலும், ஒரு குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் போடப்படும் ஊசிகளில் அதுவும் ஒன்றாகும்.
‘இயற்கையான’ மாற்று வழிகளை விரும்பும் பெற்றோர் சிலர், அந்த ஊசி தங்கள் குழந்தைகளுக்குப் பலனளிக்காது, நச்சுத்தன்மை வாய்ந்தது, வலியை உண்டாக்கும் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக அதை நிராகரிக்கின்றனர் என்று ஃபிலடெல்ஃபியா குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தை மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
