சீனாவைப் பிரதிநிதித்து ஆசியான் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் வாங் யீ

சீனாவைப் பிரதிநிதித்து ஆசியான் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் வாங் யீ

1 mins read
a0ed4298-2daa-4f15-b33f-5d0a24215038
சீனாவின் மத்திய வெளியுறவுத் துறை ஆணைய அலுவலகத்தின் இயக்குநர் வாங் யீ. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஜகார்த்தா: சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் மருத்துவக் காரணங்களால் இந்தோனீசியாவில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அரசதந்திரக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

அவருக்குப் பதிலாக முன்னணி அரசதந்திரி வாங் யீ ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் கூட்டங்களில் சீனாவைப் பிரதிநிதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கிழக்காசிய மாநாட்டுக்கும் ஆசியான் வட்டாரக் கருத்தரங்கிற்கும் முன்னர், வியாழக்கிழமையன்று ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், சீன வெளியுறவு அமைச்சரைச் சந்திக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், திரு சின் மருத்துவக் காரணங்களால் ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று அந்தப் பேச்சாளர் பின்னர் கூறினார். அது குறித்து அவர் கூடுதல் விவரம் தெரிவிக்கவில்லை.

57 வயதான திரு சின், டிசம்பர் மாதத்தில் திரு வாங்கிடமிருந்து வெளியுறவு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் இலங்கை, ரஷ்ய, வியட்னாமிய அதிகாரிகளை பெய்ஜிங்கில் சந்தித்த பிறகு இறுதியாக கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பொதுவெளியில் தோன்றினார்.

அவர் பொதுவெளியில் அடிக்கடி தென்படாததைப் பலரும் உணர்ந்துள்ளனர்.

அமெரிக்க அரசியல் செய்தித்தளமான ‘பொலிட்டிக்கோ’வில் வெளியான அறிக்கை ஒன்றில், திரு சின் பொது இடங்களில் தென்படாததற்கு அவரது உடல்நிலை காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளரிடம் கேட்டபோது, அந்த அறிக்கையைப் பற்றி தாம் கேள்விப்படவில்லை என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்