போர், உதவிப் பற்றாக்குறை: பசியும் பஞ்சமும் எளிதில் மறையாது

போர், உதவிப் பற்றாக்குறை: பசியும் பஞ்சமும் எளிதில் மறையாது

2 mins read
b77f3891-5f8b-48c6-b6ab-3159663f8da1
கடந்த பத்தாண்டுகளில் கடுமையான பசி இருமடங்காகியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக 2025ஆம் ஆண்டில் காஸா, சூடான் ஆகிய நாடுகளில் பஞ்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ரோம்: உலகில் காணப்படும் பூசல்கள், மோதல், வறட்சி இவற்றுடன் குறைந்துவரும் உதவிகள் ஆகியவை இந்த ஆண்டில் உலகளாவிய பசியை அபாயகரமான நிலையிலேயே வைத்திருக்கும்;  உலகின் மிகவும் நலிவடைந்த சில நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடையும் என்றும் 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய உணவு நெருக்கடிகள் குறித்த அறிக்கை கூறியது.

வளர்ச்சி மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் பசி கண்காணிப்பு அறிக்கையின் 10வது பதிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கடுமையான பசி இருமடங்காகியுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.  வரலாற்றில் முதன்முறையாக 2025ஆம் ஆண்டில் காஸா, சூடான் ஆகியவற்றில் பஞ்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை தெரிவித்தது.

மொத்தத்தில், 2025ஆம் ஆண்டில் 47 நாடுகள், மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த 266 மில்லியன் மக்கள் மோசமான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டனர்; அதே நேரத்தில் ஹையிட்டி, மாலி, காஸா, தெற்கு சூடான், சூடான் மற்றும் ஏமன் ஆகிய பகுதிகளிலுள்ள 1.4 மில்லியன் மக்கள் பேரழிவுகரமான நிலைமைகளை எதிர்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025ஆம் ஆண்டில் மட்டும், உலகெங்கிலும் 35.5 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டனர் என்பதும் அறிக்கை கண்டறிந்த கள நிலவரம்.

2026ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, பசி சார்ந்த பாதிப்பின் தீவிரம் கவலைக்கிடமாகவே நீடிப்பதாகவும், பாதுகாப்பில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றம், அதிகரித்த மனிதாபிமான உதவிகள் காரணமாக ஹையிட்டி மட்டுமே மிக மோசமான “பேரழிவு” நிலையிலிருந்து தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கை விளக்கியது.

இந்த ஆண்டு அறிக்கையைத் தயாரிக்க ஒத்துழைத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்துலக வேளாண் மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைவர் அல்வரோ லேரியோ, “உணவுப் பஞ்சம் எனும் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினை அன்று; மாறாக அது உலகளாவிய நிலைத்தன்மைக்கு நெருக்கடி கொடுக்கிறது என்பதே இந்த நிலை உணர்த்தும் முக்கியச் செய்தி,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்