லண்டன்: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவ முடிவெடுத்திருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
ஈரானிய ஏவுகணைகளுக்கு எதிரான தற்காப்புக்காக பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் திரு ஸ்டார்மர் தெரிவித்தார்.
“பிரிட்டிஷ் தளங்களைக் குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வாஷிங்டன் அனுமதி கேட்டிருந்தது. வட்டாரத்தில் ஏவுகணைகள் பாய்ச்சப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்க முடிவெடுத்துள்ளோம்,” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் பிரிட்டன் சம்பந்தப்படவில்லை என்று திரு ஸ்டார்மர் கூறினார். அந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். அடுத்து நடத்தப்படும் தாக்குதல்களில் பங்கேற்கும் நோக்கமும் பிரிட்டனுக்கு இல்லை என்றார் திரு ஸ்டார்மர்.
ஈரான், மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதிலடித் தாக்குதல்களை நடத்தியதை அவர் சுட்டினார். பிரிட்டிஷ் குடிமக்கள் இருந்த ஹோட்டல்களையும் விமான நிலையங்களையும் ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சமரசப் பேச்சின் மூலம் தீர்வு காண்பதே அந்த வட்டாரத்திற்கும் உலகத்திற்கும் ஆகச் சிறந்த வழியாக இருக்கும். அணுவாயுதங்களை உற்பத்தி செய்யும் விருப்பங்களைக் கைவிட ஈரான் இணங்க வேண்டும்,” என்றார் பிரிட்டிஷ் பிரதமர்.
வளைகுடா வட்டாரத்தில் உள்ள பிரிட்டனின் நட்பு நாடுகள், இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுக்கும்படி தங்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் சொன்னார். பிரிட்டிஷ் குடிமக்களைக் காக்க வேண்டியது தமது கடமை என்றார் திரு ஸ்டார்மர்.
பிரிட்டிஷ் போர் விமானங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளில் ஏற்கெனவே பங்கெடுக்கத் தொடங்கிவிட்டன. ஈரானியத் தாக்குதல்களை அவை இடைமறித்ததாகவும் திரு ஸ்டார்மர் தெரிவித்தார். அச்சுறுத்தலை நிறுத்துவதற்கு ஒரே வழி, ஏவுகணைகளை ஆரம்பக்கட்டத்திலேயே சேமிப்புக் கிடங்குகளிலோ பாய்ச்சப்படும் தளங்களிலோ அழிப்பதுதான் என்று அவர் கூறினார்.

