வாஷிங்டன்: ஈரான் மீதான போர் ஒரு மாதத்திற்கு நீடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிக் காவற்படையினரின் தலைமையகத்தை வாஷிங்டன் அழித்ததைத் தொடர்ந்து அவரின் கருத்து வந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை டெஹ்ரானின் தளபத்தியத்திற்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையைச் சனிக்கிழமை (மார்ச் 1) தொடங்கின.
ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனி அதில் கொல்லப்பட்டார். கொந்தளிக்கும் மத்திய கிழக்கு நிலவரம், உலகப் பொருளியல் சூழலை மேலும் நிச்சயமற்றதாக்கியுள்ளது. கப்பல், விமானப் போக்குவரத்து, எண்ணெய் வர்த்தகம் எனப் பல துறைகளில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போர் பல நாள்கள் தொடரும் என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
இந்நிலையில், டெய்லி மெயிலுக்கு அளித்த நேர்காணலில், தாக்குதல்கள் நான்கு வாரத்திற்கு நீடிக்கும் என்றார் திரு டிரம்ப்.
“இது எப்போதுமே நான்கு வாரச் செயல்முறைதான். அது பெரிய நாடு. அதனால் நான்கு வாரம் அல்லது அதற்குக் குறைவாக ஆகும்,” என்று அவர் சொன்னார்.
ஈரானியர்களுடன் பேச்சு நடத்த தொடர்ந்து தயாராய் இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறினார். ஆனால் அது விரைவில் நடைபெறுமா என்பதை அவர் சொல்லவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“எனக்குத் தெரியாது. அவர்கள் பேச விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் சென்ற வாரம் பேசியிருக்க வேண்டும், இந்த வாரம் அன்று என நான் சொன்னேன்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டதாக அறிக்கை சுட்டியது.
தாக்குதல்களில் ஈரானின் 48 தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அந்நாட்டின் 9 கப்பல்களை மூழ்கடிக்கச்செய்ததாகவும் திரு டிரம்ப் கூறினார். எஞ்சியவற்றைக் குறிவைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரு டிரம்ப் சனிக்கிழமை பிறப்பித்த போர் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க விமானங்களும் போர்க்கப்பல்களும் 1,000க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளைத் தாக்கின.
ஈரானும் பதிலடித் தாக்குதல்களை நடத்துகிறது. அவற்றில் அமெரிக்கப் படையினர் மூவர் மாண்டதாகவும் ஐவர் காயமுற்றதாகவும் கூறப்பட்டது.
குவைத்தில் உள்ள ராணுவத்தளம் தாக்கப்பட்டதில் அமெரிக்கப் படையினர் சிலர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கப் படையினர் மாண்டதற்கு வருத்தம் தெரிவித்த டிரம்ப், போர் முடிவதற்கு முன்னர் மேலும் சிலர் மரணமடையக்கூடும் என்று எச்சரித்தார்.
“ஆனால், அவர்களின் மரணங்களுக்கு அமெரிக்கா பழிதீர்க்கும். அடிப்படையில் நாகரிகத்திற்கு எதிராகப் போர் தொடுத்துள்ள பயங்கரவாதிகளுக்கு ஆகக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்,” என்றார் அவர்.

