உலகில் அதிகரித்து வரும் வெப்பம் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று அஞ்சப்படுகிறது.
அதனால் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ஆண்டிற்கு 9 மில்லியன் பேர் கூடுதலாக மாண்டுபோகலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. சுத்தமான நீர், காற்று, உணவுக்கான தரமான மண், வாழ்வாதாரம் போன்றவையும் பாதிக்கப்படுவதாக நிறுவனம் கூறியது.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்க தாமதமானால் அது மேலும் பல பாதிப்புகளை தரும் என்றும் அது எச்சரித்தது.
ஆப்பிரிக்க நாடுகள், ஏழை நாடுகள், சிறு தீவுகள் போன்றவை பருவநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியது.
வெப்ப நிலை மாற்றத்தால் கொசு, பூச்சிகள், காற்றில் பரவும் நோய்கள் போன்றவையும் அதிகரிக்கின்றன. அவை மட்டுமே ஆண்டிற்கு 700,000 பேரைக் கொல்லக்கூடும்.
பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், மழை, வறட்சி, காலரா, போலியோ போன்றவையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

