நோம் பென்: அங்கோர் வாட் பகுதியில் மூர்க்கத்தனமான குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து கம்போடிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குரங்குகளுக்கு தீனி போடவோ அவற்றுடன் உறவாடவோ வேண்டாம் எனப் பொதுமக்களிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்துக்குத் தீர்வுகாண வேளாண், வனப்பகுதி, மீன் வளத்துறை அமைச்சுடன் சேர்ந்து அப்சரா தேசிய அணையம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வை அதிகரிக்க உதவுமாறும் இப்பிரச்சினையை மேலும் மோசமடையச் செய்யும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுப்பயண நிறுவனங்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆணையத்தின் பேச்சாளரான திரு லோங் கோசல், குரங்குகள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை உறுதிப்படுத்தினார்.
“இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. வேறு சிலரின் உணவு திருடப்பட்டது,” என்றார் அவர்.
வருகையாளர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறும் குரங்குகளை வேறு இடத்துக்கு மாற்றுவதால் விமர்சனங்களை எதிர்நோக்காதவாறும், இந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

