கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலம் அருகே நீரில் நட்சத்திர மீன்களைத் தொட்டாலோ அவற்றை பிடித்தாலோ சுற்றுப்பயணிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாபா சுற்றுப்பயண, கலாசார, சுற்றுப்புற அமைச்சர் கிறிஸ்டினா லியூ எச்சரித்துள்ளார்.
கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதை வலியுறுத்தும் கோட்பாடுகளை இத்தகைய செயல்கள் மீறுவதாக அவர் சொன்னார்.
நீடித்த, நிலைத்தன்மையுடைய சுற்றுப்பயணத்துக்கு சாபா அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டில் இந்தக் கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.
சீன நாட்டவர் என நம்பப்படும் சுற்றுப்பயணி ஒருவர், கோத்தா கினபாலு அருகேயுள்ள நீர்ப்பகுதியில் நட்சத்திர மீன்கள் பிடிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து திருவாட்டி லியூ இக்கருத்தை முன்வைத்தார்.
“இச்சம்பவத்தை நாங்கள் கடுமையானதாகக் கருதுகிறோம். சாபாவில் வனவிலங்கு, இயற்கை சுற்றுச்சூழல் கட்டமைப்பு தொடர்பில் விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கமாட்டார்கள்,” என்று அவர் எச்சரித்தார்.
அந்தச் சுற்றுப்பயணி மொத்தம் 30 நட்சத்திர மீன்களைப் பிடித்ததாக திருவாட்டி லியூ தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகளும் தங்கள் ஊழியர்களும் வழிகாட்டுதல்கள், விதிகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்யுமாறு பயணத்துறை நிறுவனங்களிடம் அவர் வலியுறுத்தினார்.

