கோலாலம்பூர்: சுற்றுப்புற, பருவநிலை மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புரிந்துணர்வுக் குறிப்பை மலேசியாவும் இந்தோனீசியாவும் ஆராய்ந்து வருகின்றன.
காடுகளிலும் நிலப்பகுதிகளிலும் ஏற்படக்கூடிய தீச்சம்பவங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் ஆபத்துகளைக் குறைப்பதும் அதன் நோக்கம்.
தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளின் கண்காணிப்புத் தரவுகளைப் பகிர்வது, அதிக ஆபத்தான பகுதிகளை நிர்வகிப்பது, தீ பரவாமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் புரிந்துணர்வுக் குறிப்பு கவனம் செலுத்தும். இயற்கைவள, சுற்றுப்புற நிலைத்தன்மைத் துணை அமைச்சர் சையத் இப்ராகிம் சையத் நோ அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
“2030ஆம் ஆண்டுக்குள் புகைமூட்டமில்லா வட்டாரத்தை அடைவது என்ற ஆசியான் அமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப, புகைமூட்டச் சம்பவங்களைத் தடுப்பது, கண்காணிப்பது, பதில் நடவடிக்கைகளை எடுப்பது முதலியவற்றை வலுப்படுத்துவதற்கான முதன்மை வழியாக, எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேடு குறித்த ஆசியான் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மலேசியாவும் இந்தோனீேசியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்," என்று அவர் தெரிவித்தார். புதன்கிழமை (அக்டோபர் 21) நாடாளுமன்றக் கேள்வி-பதில் நேரத்தின்போது திரு சையது இப்ராகிம் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய புகைமூட்ட ஆபத்தைக் குறைக்க இந்தோனீசியாவுடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அரசதந்திர நடவடிக்கைகள், ஒத்துழைப்புகள் குறித்து மன்ற உறுப்பினர் இஸ்கந்தர் ஸுல்கர்னைன் அப்துல் காலித் கேட்ட கேள்விக்கு அவர் பதில் தந்தார்.
இந்தோனீசியாவில் எரியும் நெருப்பைக் கையாள்வதில் மலேசியா, செப்டம்பர் 9ஆம் தேதி அந்நாட்டுக்கு அதிகாரபூர்வமாய் உதவ முன்வந்ததாகத் திரு சையத் இப்ராஹிம் தெரிவித்தார்.
கலிமந்தானிலும் சுமாத்ராவிலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் மலேசியாவின் உதவியை ஏற்றுக்கொள்ள இந்தோனீசியாவும் ஒப்புக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் சட்டத்தைப் போன்றே எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ளப் புதிய சட்டத்தை இயற்றத் தயாராய் இருப்பதாக மலேசியா கூறியுள்ளது. இருப்பினும், தீச்சம்பவங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய போதுமான ஆதாரங்களைச் சேகரிப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சட்டத்தைக் கொண்டுவருவதில் கொள்கை ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்றும் ஆனால் அதைத் திறம்பட நடைமுறைப்படுத்த தெளிவான வழிகள் தேவை என்றும் திரு சையத் இப்ராகிம் கூறினார்.
மன்ற உறுப்பினர் சியாரெட்ஸான் ஜோஹான் கேட்ட கேள்விக்குத் திரு சையத் இப்ராகிம் பதிலளித்தார்.
