போரின் தொடக்கத்தைவிட இப்போது பலமாக உள்ளோம்: ஈரானிய ராணுவம்

போரின் தொடக்கத்தைவிட இப்போது பலமாக உள்ளோம்: ஈரானிய ராணுவம்

படம்: ராய்ட்டர்ஸ்

07 Nov 2026 - 3:59 pm

2 mins read

டெஹ்ரான்: அமெரிக்காவுடனான போரின் தொடக்கத்தைவிடத் தங்கள் ராணுவம் இப்போது வலுவடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும், அமெரிக்கா கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை அது மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரானிய ராணுவப் பேச்சாளர் முகமது அக்ரமினியா கூறினார்.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கிடைத்த அனுபவத்தால், ஈரானின் ஆயுதப் படைகள் இப்போது அதிக விழிப்புடனும் கூடுதல் பலத்துடனும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. இதனால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பல மாதங்களாகப் பதற்றம் நீடிக்கிறது.

ஈரான்மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியதால் அதற்குப் பதிலடி தரும் விதமாக டெஹ்ரான் வா‌ஷிங்டனின் மத்திய கிழக்கு நட்பு நாடுகள்மீது தாக்குதல் நடத்துகிறது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தியுள்ளதால் இப்போது மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது.

கத்தார் முயற்சி

இதற்கிடையே, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மீண்டும் சண்டை மூள்வதைத் தடுக்க சமரசப் பேச்சாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் குறித்து விவாதிக்க கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை நவம்பர் 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தொடர்புகொண்டார்.

பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் முயன்று வருவதாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

வட்டாரத்தில் நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க, கத்தாரின் சமரச முயற்சிகள் தொடர்வதாக கத்தார் பிரதமர் கூறினார்.

“அமெரிக்காவின் இடைத் தவணைத் தேர்தலுக்குப் பிறகும் தீர்வு காண டிரம்ப் நிர்வாகம் தயாராகவே உள்ளது. ஒப்பந்தத்தை எட்டுவதில் வாஷிங்டனின் ஆர்வம் மாறவில்லை,” என்று கத்தார் பிரதமர் கூறினார்.

இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்