இஸ்‌ரேலின் தொடர் தாக்குதல்: காஸாவில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
b96f651a-775f-4f52-aa04-499722b589eb
கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலியத் தாக்குதல் நடந்த பகுதியில் காணப்பட்ட சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: காஸா மீது ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் நிலத் தாக்குதல்களையும் நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய, தெற்கு காஸாவில் நிலத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை (மார்ச் 19) குறிப்பிட்டது. அதோடு, இரண்டாம் நாளாக நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதல்களில் குறைந்தது 85 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அண்மைய தாக்குதல்கள், வடக்கு, தெற்கு காஸாவில் உள்ள பல வீடுகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நடப்பில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படும் வகையில் முதலில் நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதல்களில் 513க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது. அதற்கு மறுநாள் இஸ்ரேல் மீண்டும் நிலத் தாக்குதல்கைளை நடத்தத் தொடங்கியது.

தங்களின் ராணுவ நடவடிக்கைகள், காஸாவில் நெட்ஸாரிம் வாசலில் (Netzarim Corridor) தனக்குள்ள ஆதிக்கத்தை நீட்டித்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலின் நிலத் தாக்குதல், நெட்ஸாரிம் வாசலில் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது ஆகிய நடவடிக்கைகள் இரு மாதங்களாக நடப்பில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மோசமான வகையில் மீறப்பட்ட ஆக அண்மைய சம்பவமாகும் என்று ஹமாஸ் அமைப்பு சாடியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தாங்கள் எண்ணம் கொண்டுள்ளதாக ஹமாஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தியது.

இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதல் ஒன்றில் காஸாவின் மத்தியப் பகுதியில் இருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் (ஐநா) தலைமையகத்தில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இதர ஊழியர்கள் ஐவர் காயமுற்றதாகவும் ஐநா புதன்கிழமையன்று தெரிவித்தது.

ஆனால், இஸ்ரேல் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஒரு தளத்தைத்தான் தாங்கள் குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியது.

அந்தத் தளத்திலிருந்து தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்ததாகவும் இஸ்ரேல் சொன்னது.

ஐநா ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட எல்லா தாக்குதல்களுக்கு எதிராகவும் அதன் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். அதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறு அவர் குரல் கொடுத்தார்.

அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி காஸா போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஐநா ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது 280க்கு அதிகரித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்