நாங்கள் வென்றுவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

நாங்கள் வென்றுவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

2 mins read
98b94526-146e-42c4-b67f-b7fad5ab4b81
ஈரானுக்கு எதிரான போர் நின்றுவிடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தாம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அவர் நிராகரித்துள்ளார்.

முன்னதாக, ஈரானில் புதிதாக உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, எதிரிகளுக்கு ‘தலையை சுற்றவைக்கும்’ அளவுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டிரம்ப்பின் கருத்து வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறும் தறுவாயில் இருப்பதால் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் எதிர்த்தரப்பை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக் கப்பல் போக்குவரத்துப் பாதையைக் கண்காணிக்கும் பொறுப்பை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அமெரிக்கா உதவ முன்வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து மொஜ்தபா காமெனி இன்னும் பொதுவெளியில் தலைகாட்டவில்லை.

படைகளைக் குறைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் வட்டாரம் முழுவதும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. மக்கள் நவ்ருஸ் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடிய வெள்ளிக்கிழமை அன்றும் டெஹ்ரானில் புதிய வெடிச்சத்தங்கள் கேட்டன.

இந்நிலையில் ஜெருசலத்தில் அல் அக்சா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள பழைய நகரில் ஏவுகணைத் தாக்குதலால் பெரும் பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புனிதத் தலங்களை ஈரான் தாக்குவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இதற்கிடையே கத்தாரின் ரான் லஃபான் நிலைய வசதிகளும் பின்னர் குவைத்தின் மினா அல்-அஹமடி சுத்திகரிப்பு நிலையமும் ஆளில்லா வானூர்திகளால் தாக்கப்பட்டன. இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

சிரியா ராணுவ முகாம்களைத் தாக்கியதற்காக இஸ்ரேலைத் துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விரும்புவதாகவும், ஆனால் முந்தைய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பேசுவதற்கு யாரும் இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்