டெல் அவிவ்/ ஜெருசலம்/ வாஷிங்டன்: கப்பல் போக்கு வரத்துக்கு முக்கிய ஆதாரமான ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலும் அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய மிரட்டலை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரில் ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்த மறுநாளே டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
“இந்த நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் எந்தவித மிரட்டலும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக திறக்காவிட்டால் அதன் பல மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்கும்,” என்று சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரு டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கை ஈரானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் உள்கட்டமைப்புகள்மீதான தாக்குதலை விரிவுபடுத்துகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருந்ததால் அவ்வழியாகச் செல்வதை உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.
உலகளாவிய கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு அந்த குறுகலானப் பாதை வழியாகச் செல்கின்றன.
அது மூடப்பட்டுள்ளதால் கடந்த வாரம் ஐரோப்பிய எரிவாயு விலை 35 விழுக்காடு அதிகரித்தது.
இந்நிலையில் ஈரானின் ராணுவத் தலைமையகம் பதில் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமது நாட்டின் எரிவாயு, எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகளை அமெரிக்கா தாக்கினால் இவ்வட்டாரத்தில் உள்ள அமெரிக்காவின் எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், நீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்புகளை தாக்குவோம் என்று ஈரான் மார்ச் 22ஆம் தேதியன்று கூறியது.
கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கத்தாரின் ராஸ் லஃபான் தொழிற்நகரத்தை ஈரான் தாக்கியது. இதன் காரணமாக எரிவாயு விலை மேலும் கூடியது. அந்த நகரத்தில் உலகின் திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தை சீர்செய்ய பல ஆண்டுகள் ஆகலாம்.
இதற்கிடையே, ஈரானியப் படைகள் முதல் முறையாக நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்சியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் மத்திய கிழக்குக்கு அப்பாலும் தாக்குதலை ஈரான் விரிவுபடுத்தக்கூடிய அபாயமுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியகோ கார்சியா அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவத் தளத்தை நோக்கி கடந்த வாரம் 4,000 கிலோ மீட்டர் நெடுந்தொலைவு ஏவுகணைகள் இரண்டை ஈரான் பாய்ச்சியது. அது, இலக்குகளைத் தாக்காவிட்டாலும் ஈரானுக்கு உள்ள ஆற்றலை நிரூபித்துள்ளது.

