ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ காஸா அமைதித் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காஸா மக்களுக்குப் பயன் உள்ள வகையில் அமைதித் திட்டம் செயல்படாவிட்டால் அதிலிருந்து இந்தோனீசியா விலகும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போரால் துவண்ட காஸாவை கட்டியெழுப்ப அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையில் அமைதித் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் உலக நாடுகள் பல சேர்ந்துகொண்டன.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனீசியாவும் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று அத்திட்டத்தில் சேர்ந்தது. அதேபோல் காஸா அமைதித் திட்டத்திற்கு உதவ 8,000 வீரர்கள் வரை அனுப்புவதாக இந்தோனீசிய ராணுவம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைகளுக்கு இந்தோனீசிய மக்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீனத்திற்கான ஆதரவை இந்தோனீசியா குறைத்துள்ளதாக அவர்கள் குறைகூறினர்.
இதையடுத்து, அதிபர் சுபியாந்தோ அறிக்கை வெளியிட்டார். “காஸா மக்களுக்கும் இந்தோனீசியாவின் கொள்கைகளுக்கும் சரிவராத செயல்களில் அரசாங்கம் ஈடுபடாது. திட்டத்திலிருந்து வெளியாகும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கப் பூசல் காரணமாக காஸா அமைதித் திட்டம் தொடர்பான சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

