வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (நவம்பர் 13) டோனல்ட் டிரம்ப்பை வரவேற்றார்.
அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பும் திரு பைடனும் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். ஆட்சி மாற்றம் சுமுகமாக இருப்பதை இருவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
“மீண்டும் வருக!” என திரு பைடன், 81, டிரம்ப்பை, 78, வாழ்த்தினார்.
ஆட்சி மாற்றம் சுமுகமாக இருப்பதை தாம் எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப்புக்கு எல்லா வசதி[Ϟ]களையும் செய்து தர தாங்கள் ஆவன செய்வதாகவும் திரு பைடன் உறுதிபூண்டார்.
இருவரும் கைகுலுக்கியபோது திரு பைடனின் பார்வை கீழ் நோக்கி இருந்தது. டிரம்ப் முன்னோக்கி திரு பைடனின் கண்களை நோக்கிப் பார்த்தார்.
“அரசியல் சிரமமானதே. பல நேரங்களில் இது மிகவும் நல்ல உலகம் கிடையாது. ஆனால், இன்று இது நல்ல உலகமாக இருந்ததற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார் டிரம்ப்.
இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்ததாகவும் அது சிறந்த முறையில் நடந்ததாகவும் வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரின் ஜீன் பியர் கூறினார். டிரம்ப் விவரமான கேள்விகளுடன் வந்ததாக அவர் சொன்னார்.
இருவரும் உக்ரேன், மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
டிரம்ப்பின் மனைவி மெலானியா, இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. திரு பைடனின் மனைவி ஜில், மெலானியாவுக்கு கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதத்தை டிரம்ப்பிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை கூறியது.