பிரிட்டனில் நலத்திட்ட மோசடிகளால் $17 பில்லியன் இழப்பு

பிரிட்டனில் நலத்திட்ட மோசடிகளால் $17 பில்லியன் இழப்பு

2 mins read
2ff2f2a0-b1dd-4adb-84a8-dacba18dc18c
உதவித்தொகை கோருபவர்களை வேலைகளில் அமர்த்துவதன் மூலம், நலத்திட்ட உதவிகளுக்கான செலவினங்களைக் குறைப்பதே தமது நோக்கம் என்று மான்செஸ்டரின் முன்னாள் மேயர் ஆன்டி பர்ன்ஹேம் கூறினார். - படம்: புளூம்பெர்க்

லண்டன்: பிரிட்டனின் நலத்திட்ட முறையில் நடக்கும் மோசடிகளாலும் தவறுகளாலும், வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்டு (S$17 பில்லியன்) இழப்பு ஏற்படுவதாக அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டக் கண்காணிப்பு அமைப்பின் பகுப்பாய்வு காட்டுகிறது.

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 22) கியர் ஸ்டார்மர் பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, பிரதமராகும் நோக்கில் மான்செஸ்டரின் முன்னாள் மேயர் ஆன்டி பர்ன்ஹேம் முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், அந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமராக இருந்த ஸ்டார்மர் தமது பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே அரசு நலத்திட்ட உதவிகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவரது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உதவித்தொகை கோருபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நலத்திட்ட உதவிகளுக்கான செலவினங்களைக் குறைப்பதே தனது நோக்கம் என்று பர்ன்ஹேம் ‘தி டைம்ஸ்’ நாளிதழிடம் கூறினார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்தில், நிர்வாகத் தவறுகளாலும் போலி கோரிக்கைகளாலும் ஏற்பட்ட செலவுகள் அதிக அளவில் உயர்ந்தன. இருப்பினும், மோசடிகளைத் தடுக்க அரசாங்கம் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்தச் செலவுகள் தற்போது கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்துக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அலுவலகம் அதன் நலத்திட்டப் போக்குகள் அறிக்கையில் தெரிவித்தது.

அப்படியிருந்தும், அந்தத் தொகை தற்போது போக்குவரத்துத் துறைக்காக அரசு செலவிடும் மொத்தத் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவுக்குச் சமமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டன் ஒட்டுமொத்தமாக 2025ஆம் ஆண்டில் நலத்திட்டங்களுக்காகக் கிட்டத்தட்ட 350 பில்லியன் பவுண்டு செலவிட்டது. அந்தத் தொகையில் அரசு வழங்கும் ஓய்வூதியம், வேலையின்மை, உடற்குறையுள்ளோருக்கான உதவித்தொகைகள் ஆகியவையும் அடங்கும்.

2025-2026 காலகட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 3.2 விழுக்காடு மோசடியானவை அல்லது தவறுதலாக வழங்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்