காஸா/ஜெருசலம்: பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றுப் பிறந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகியவை பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ் விரைவில் அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையில் ஏறக்குறைய ஈராண்டாகப் போர் நீடிக்கிறது.
காஸாவில் இருக்கும் ஏராளமானோர் மேற்கத்திய நாடுகளின் அங்கீகாரம் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறினர்.
இறுதியாக உலகம் தங்களின் குரலைக் கேட்கத் தொடங்கியிருக்கிறது என்பதையே இந்த அங்கீகாரம் காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதுவே ஒரு வகையில் வெற்றிதான் என்றனர் காஸாவாசிகள்.
செய்திகளில் வரும் எண்ணிக்கையாக மட்டும் தாங்கள் இருக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
“வலி, மரணம், படுகொலை இவற்றுக்கு இடையில் வசிக்கும் நாங்கள் மிகச் சிறிய நம்பிக்கையைக் கொடுக்கும் எதனையும் பற்றிக்கொள்வோம்,” என்று காஸாவில் இருக்கும் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜி7 தொழில்வள நாடுகளைப் பொறுத்தவரை பாலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக்கொள்ளும் முடிவை முதலில் எடுத்தவை பிரிட்டனும் கனடாவுமே. காஸாவில் போரை நிறுத்த இஸ்ரேலை நெருக்குவது அவற்றின் நோக்கம்.
பிரிட்டிஷ் அரசாங்கக் கொள்கையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் முடிவைப் பிரதமர் கியர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்தார்.
எக்ஸ் தளத்தில வெளியிடப்பட்ட காணொளியில் அவர் பேசினார்.
“மத்திய கிழக்கில் மோசமடைந்துவரும் அவல நிலையில் அமைதியையும் இரு நாட்டுத் தீர்வையும் கொண்டுவரும் சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக நடவடிக்கை எடுக்கிறோம்,” என்றார் திரு ஸ்டார்மர்.
மேற்கத்திய நாடுகளின் முடிவு குறித்து இஸ்ரேல் சினமடைந்துள்ளது. அவற்றின் முடிவு கவலையளிப்பதாக அது தெரிவித்தது.
பாலஸ்தீன நாடு என ஒன்று உருவாகப்போவதில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார். அதனை அங்கீரித்த நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெகுமதியளித்திருப்பதாக அவர் சொன்னார்.
அதனை மறுத்த திரு ஸ்டார்மர், “ஹமாசுக்கு எதிர்காலம் இல்லை, அரசாங்கத்திலும் பாதுகாப்பிலும் இடம் இல்லை என்பதே அந்த அங்கீகாரத்திற்குப் பொருள்,” என்றார்.
“இரு நாட்டுத் தீர்வுக்கான தங்களின் உண்மையான அழைப்பு, ஹமாசின் வெறுக்கத்தக்க குறிக்கோளுக்கு எதிரானது,” என்பதைத் திரு ஸ்டார்மர் தெளிவுபடுத்தினார்.
“காஸாவில் நிலவும் பசி, பட்டினி, கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. மரணமும் பேரழிவும் அச்சத்தை மூட்டுகின்றன,” என்று அவர் சொன்னார்.
பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதைக் காட்டவே பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்ததாக பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.
பாலஸ்தீன ஆணையத்தின் அதிபர் மஹ்மூட் அபாஸ் பிரிட்டனின் முடிவை வரவேற்றார். பாலஸ்தீன நாடு, இஸ்ரேலுடன் அருகருகே பாதுகாப்புடனும் அமைதியுடனும் நிலைபெற அது வழிவகுக்கும் என்றார் திரு அபாஸ்.