இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகள் ஏற்படுத்திய போர்நிறுத்த உடன்பாட்டின் விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அந்த உடன்பாடு தொடர்பாக தீர்க்கப்படாத பல அம்சங்கள் இன்னும் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
இருப்பினும், உடன்பாட்டின் அம்சங்கள் விரைவில் இறுதிசெய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இருதரப்பிலும் உடன்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அத்துடன், இஸ்ரேலிய அரசாங்கமும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதன் பிறகே உடன்பாடு அமலுக்கு வரும்.
ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உடன்பாடு நடப்புக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி கூறியிருந்தார்.
இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாடு காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அத்துடன், இருதரப்பிலும் பிணை பிடிக்கப்பட்டு உள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது அதன் முக்கிய அம்சம்.
2023 அக்டோபரில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
அவர்களில் 94 பேர் காஸாவில் இன்னும் சிறை வைக்கப்பட்டள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், 60 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும்போது இஸ்ரேல் வசம் உள்ள ஏறத்தாழ 1,000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களில் பலர் பல்லாண்டுகளாக இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போர்நிறுத்த உடன்பாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது மூன்று கட்டங்களாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தப்படும். அப்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரை உள்ளடக்கிய 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். அதே எண்ணிக்கையில் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையாக அது இருக்கும். காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும். உடன்பாடு நடப்புக்கு வந்த 16வது நாளில் அது தொடங்கும்.
மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டம் காஸாவின் மறுகட்டுமானம் தொடர்பானது. பிணைக் கைதிகளின் எஞ்சிய உடல்கள் இன்னும் ஏதும் எஞ்சி இருந்தால் அவற்றை அப்போது ஒப்படைக்க வேண்டும்.