இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையிலான சண்டை நிறுத்த உடன்படிக்கையால் சிங்கப்பூர் ஊக்கமடைந்திருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஆனால் செய்வதற்கு இன்னும் அதிகம் உள்ளது என்று அவர் நினைவூட்டினார்.
குறிப்பாக, அமைதிநிலை தொடரும் பட்சத்தில் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் என்றார் அவர்.
இது தொடக்கநிலை மட்டுமே என்று திரு வோங் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட பிரதமர் வோங் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பல நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையிலான அமைதித் திட்டத்தின் முதல் படிநிலை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.
போரின் காரணமாக காஸா நிலைகுலைந்துவிட்டது.
பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வாடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமைக்குப் பிறகு (அக்டோபர் 10), போர் நிறுத்த உடன்படிக்கை நடப்புக்கு வந்தது.
காஸாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படையினர் மீட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஹமாஸ் போராளிகள் வசம் உள்ள அனைத்துப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும் காஸா முனைக்குள் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டை நிறுத்த காலகட்டத்தில் அமெரிக்கத் தலைமைத்துவம் அவசியமானது என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
காஸாவில் அமைதிநிலையைக் கொண்டுவர அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது என அவர் கூறினார்.
இஸ்ரேல், ஹமாஸ் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருக்கும் அழுத்தம் தரும் ஆற்றலைக் கொண்ட ஒரே நாடு அமெரிக்கா என்றார் பிரதமர் வோங்,
அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளும் பேரளவில் பங்களித்தன.
இருப்பினும், இருநாட்டுத் தீர்வு இலக்கை எட்ட, காஸா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு தொடர்வது அவசியம் என்று பிரதமர் வோங் கூறினார்.
“இவை சவால்மிக்க பணிகள். இருநாட்டுத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மூலம் பாலஸ்தீனர்களுக்கெனத் தனிநாடு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதன்மூலம் பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் நீடித்த அமைதிநிலை மற்றும் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
“காஸா தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண இதற்கு முன்பு பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை தோல்வியில் முடிந்தன. இருப்பினும், தீர்வு காணும் முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்,” என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.