நியூசிலாந்தைச் சேர்ந்த 36 வயது எம்மா ஹோல்டன், தமது நாட்டில் ஐந்து ஆண்டுகளாக மியலோமா எனும் ரத்தப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்காததால், சிகிச்சைக்காக ஷாங்காய் சென்றார். அங்கு, நோயாளியின் சுய நோய் எதிர்ப்பு அணுக்களைக் கொண்டு அதிநவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் வணிகரீதியாகக் கிடைக்காத இந்தச் சிகிச்சையின் மூலம், 2025 அக்டோபரில் அவரது புற்றுநோய் கட்டுக்குள் வந்தது. இவரது கதை 2025 நவம்பரில் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் பகிரப்பட்டது.
கடந்த காலங்களில் சீனர்கள் சிகிச்சைக் வெளிநாடு சென்ற நிலை மாறி, தற்போது மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை, பல் மருத்துவம், பாரம்பரிய சீன மருத்துவம் (TCM) போன்றவற்றுக்காக வெளிநாட்டினர் சீனாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
2025ல் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 1.3 மில்லியன் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை, 2022ஐ விட 74% அதிகமாகும்.
சீனாவின் மருத்துவச் சுற்றுலாச் சந்தை 2025ல் 1.2 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2035க்குள் 3.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று ஆலோசனை நிறுவனமான மார்க்கெட் ரிசர்ச் ஃபியூச்சர் மதிப்பிட்டுள்ளது.
குறைந்த சிகிச்சைச் செலவு, குறுகிய காத்திருப்பு காலம், உயிரியல் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இதற்குக் காரணம்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மருந்துத் துறையைக் கொண்டுள்ள சீனா, தற்போது சுயமாகவே புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளைத் தயாரிக்கிறது.
சிங்கப்பூரின் ராஃபிள்ஸ் மெடிக்கல் குரூப், பெய்ஜிங், ஷாங்காய், சோங்கிங் ஆகிய நகரங்களில் உள்ள தனது மூன்று மருத்துவமனைகளில், 2025ல் 130 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 37,000 அனைத்துலக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7.9 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணக் கொள்கையைச் சீனா விரிவுபடுத்தியுள்ளதால், வெளிநாட்டினர் 30 நாட்கள் வரை விசா இன்றி தங்கிச் சிகிச்சை பெற முடிகிறது.
சமூக ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்தும் நோயாளிகள் சீனாவை நாடுகின்றனர்.
தாய்லாந்து, சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் சீனாவின் இந்தச் சந்தை இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. சீனாவின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் வெளிநாட்டு நோயாளிகள் 0.05 விழுக்காட்டிற்கும் குறைவே.
எனினும், வரும் காலங்களில் சீனா உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுப்பதற்கான வலுவான அடித்தளத்தை இது அமைத்துள்ளது.

