மளிகைக் கடைக்குள் புகுந்த காட்டு யானை

2 mins read
63ef2547-b767-4fac-9391-b8400c36505a
மளிகைக் கடையின் கூரையில் தலையும் உடலும் உரச, அந்த ஆண் யானை உணவுப் பொருள்களைத் தின்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. - படங்கள்: ஸ்டே இன் தாய்லாந்து/ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த உணவுப் பொருள்களைத் தின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (ஜூன் 2) பிற்பகலில் நடந்த இச்சம்பவம் தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

பிலாய் பியாங் லெக் என்றழைக்கப்படும் அந்த ஆண் யானை, பேங்காக்கிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காவ் யாய் தேசியப் பூங்காவிற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்று.

மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அது அடிக்கடி இவ்வாறு செல்வது வழக்கம்.

இருப்பினும் மளிகைக் கடைக்குள் நுழைந்து அது உணவு தேடியது இதுவே முதன்முறை.

மளிகைப் பொருள்கள் நிறைந்துள்ள அக்கடையின் கூரையில் தலையும் உடலும் உரச, அந்த ஆண் யானை உணவுப் பொருள்களைத் தின்றதைச் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் காட்டுகின்றன.

ஆசை தீர உண்டதும் அந்த யானை கடையிலிருந்து வெளியேறிவிட்டது.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது யானை கடைக்குள் நுழைந்ததாகக் கடையின் உரிமையாளர் கூறினார்.

கடையிலிருந்தோர் அலறியடித்துப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதாக அவர் சொன்னார்.

தேசியப் பூங்கா அதிகாரிகளுக்குத் தான் தகவல் தந்ததை அடுத்து அவர்கள் யானையை விரட்ட முயன்றதாகவும் ஆனால் அதற்கெல்லாம் அயராத அந்த யானை தொடர்ந்து உணவுப் பொருள்களைத் தேடி, இனிப்புப் பண்டங்கள், மொறுமொறுப்பான தின்பண்டங்கள், கோழி முட்டைகள் போன்றவற்றை உண்டதாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.

யானைகள் இவ்வாறு குடியிருப்புகளில் உணவு தேடும்போது உப்பு நிறைந்த பண்டங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் என்பதை அவை சுட்டின.

அந்த யானை செய்த அதகளத்தால் கடை உரிமையாளருக்கு 1,000 பாட் ($39.53) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்