இந்தோனீசியா: 140 பிரம்படிகளால் மயங்கி விழுந்த பெண்

மனித உரிமைக் குழுக்கள் இந்த வழக்கத்தைக் கண்டித்து வருகின்றன

இந்தோனீசியா: 140 பிரம்படிகளால் மயங்கி விழுந்த பெண்

1 mins read
e704f84a-7b29-4b20-bb6b-8a935d2d3de6
அச்சேயில் பொது இடத்தில் பிரம்படி தண்டனை தருவது வழக்கம். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் 140 பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்ட 21 வயது இளம்பெண் மயங்கி விழுந்ததாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொதுப்பூங்கா ஒன்றில் அந்தப் பெண்ணுக்கும் அவரது துணைக்கும் பிரம்படி கொடுக்கப்பட்டதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவித்தது.

திருமண உறவைத் தாண்டிய பாலியல் உறவுக்கு 100 பிரம்படிகள், மதுபானம் அருந்தியதற்கு 40 பிரம்படிகள் என ஆளுக்கு 140 பிரம்படிகள் விதிக்கப்பட்டதாக பண்டா அச்சே ஷாரியா காவல்துறை அதிகாரி முகம்மது ரிஸால் தெரிவித்தார்.

இந்தத் தண்டனையை மூன்று பெண் அதிகாரிகள் மாறி மாறி நிறைவேற்றியதாக பிபிசி தெரிவித்தது.

வெண்ணிற ஆடையை முழுவதுமாக அணிந்திருந்த அந்தப் பெண், பிரம்படிகளின்போது கதறித் துடித்தார். தண்டனையின்போது சுயநினைவை இழந்த அவர், அங்குக் காத்திருந்த மருத்துவ உதவி வாகனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இவர்களுடன் வேறு நான்கு பேருக்கும் பிரம்படி கொடுக்கப்பட்டது. ஷாரியா சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் இவர்களில் ஒருவர், ஷாரியா காவல்துறைப் படையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான சமயச் சட்டங்களைப் பின்பற்றிவரும் அச்சே மாநிலத்தில் பிரம்படித் தண்டனை வழக்கமாக உள்ளது. மனித உரிமைக் குழுக்களால் இது பெரிதும் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் ஷாரியா சட்டத்தைக் கொண்டுள்ள ஒரே மாகாணமாக உள்ள அச்சேயில், பொது இடத்தில் பிரம்படிகளை நிறைவேற்றுவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்