பாலியல் அத்துமீறல் என 4 வயதுச் சிறுவன் மீது பெண் புகார்

பாலியல் அத்துமீறல் என 4 வயதுச் சிறுவன் மீது பெண் புகார்

2 mins read
6c0218cc-4635-455b-86fd-02bfc6fa9597
உணவகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. - படம்: வெய்போ

ஹுனான்: நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் பெண் ஒருவரிடம் தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்ற (ஆகஸ்ட்) மாதம் 26ஆம் தேதி ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகர உணவகத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சிறுவன் தம் மீது உரசிச் சென்றபோது தமது பின்புறத்தைத் தொட்டதாகப் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பான நான்கு நிமிடக் காணொளி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

அந்தப் பெண் உணவகக் காசாளரிடம் பணம் செலுத்தியபோது, சிறுவன் பின்னால் ஓடிவருவதும் அவனது கை அப்பெண்ணின் மீது தற்செயலாகப் படுவதுபோல் உரசிச் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

உடனடியாக அப்பெண், சிறுவனை ‘அப்படியே நில்’ என்று கத்தியவாறு, அவனது கழுத்தைப் பிடித்து மிரட்டியதும் அதில் பதிவாகியுள்ளது.

சிறுவன் அழுகையுடன் அவரின் பிடியிலிருந்து விடுபட முயலும்போது, அங்கே வந்த சிறுவனின் தாய் அப்பெண்ணைத் தட்டிக் கேட்கிறார்.

அதனைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே அதிகாரிகள் மூன்று முறை சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தபோதிலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) இதுகுறித்துப் பேசிய சிறுவனின் தந்தை, தம் மகன் அப்பெண்ணைக் கடந்து ஓடும்போது நிலைதடுமாறியதாகவும் அது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் கூறினார்.

“இணையத்தில் பரவி வரும் வதந்திகள் கூறுவதுபோல இது பின்புறத்தைத் தொடுவதோ அல்லது பாலியல் அத்துமீறலோ அல்ல. நான்கு வயதுக் குழந்தைக்கு பாலினம் அல்லது பாலியல் சார்ந்த விழிப்புணர்வே கிடையாது. இதில் தவறான நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

தாமும் தம் மனைவியும் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அது திட்டமிட்ட செயல் அல்ல என்று விளக்கமளித்ததாகவும் சிறுவனின் தந்தை கூறினார்.

இருப்பினும், பிரச்சினைக்கு முடிவு கிட்டியதா என்று தெரியாத நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பான செய்தியும் காணொளியும் தொடர்ந்து பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பாலியல்சீனாபுகார்