பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமை மாது ஒருவரின் இடது கால் மின்பாதையில் சிக்கிக்கொண்டது.
அதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுவினர் அப்பெண்ணின் காலின் ஒரு பகுதியை வெட்டி அகற்ற நேரிட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவம் அந்த விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்பட்டது. கண்காணிப்பு கேமராப் பதிவில் அம்மாது மீது பயணப்பை ஒன்று இடிப்பதையும் அதனால் அவர் கீழே விழுவதையும் காண முடிகிறது. அதையடுத்து அவரது கால் மின்பாதையில் சிக்கிக்கொண்டது.
சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு இரங்கல் தெரிவித்த விமான நிலைய நிர்வாகம், அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் அவருக்கு இழப்பீட்டுத் தொகை தரப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.