ஹாங்காங்: மனிதனுக்கு உதவும் இலக்குடன் தொழில்நுட்பம் செயல்படுவது இயல்பு. ஆனால் செயற்கை நுண்ணறிவின் அபார வளர்ச்சி சில நேரங்களில் பாதகமாகவும் அமையலாம்.
ஹாங்காங்கின் மகாவ் நகரில் ஒரு ‘ரோபோ’ இயந்திர மனிதன் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த மாதின் பின்னால் சென்றதைப் பார்த்து அந்த மாது திடுக்கிட்டு மனத்தளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்.
அம்மாது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஓய்வில் இருந்ததாக காவல்துறையினர் புதன்கிழமை (மார்ச் 18) தெரிவித்துள்ளனர்.
கைத்தொலைபேசியை பயன்படுத்தியபடி சென்ற மாது தீடீரென அந்த ரோபோவைப் பார்த்து மிரண்டு போனதால் அவருக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டது.
இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில், அந்த மனித ரோபோவை மாது கோபத்துடன் திட்டுவது தெரிகிறது. ரோபா அதன் கைகளை அந்த மாதை நோக்கி அசைப்பதையும், பொதுமக்கள் சுழ்ந்து நின்றபடி சம்பவத்தைப் பார்வையிடுவதையும் அதில் காணமுடிந்தது.
“நிறைய வேலைகள் உள்ளபோது ஏன் எனக்கு தொல்லை தருகிறாய் உனக்கு பைத்தியமா?” என்று அந்த மாது ‘கன்டனீஸ்’ மொழியில் ரோபாவைப் பார்த்து வினவியது காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இயந்திர மனிதனைத் தொடாததால் அம்மாதுக்குப் பெரிய காயங்கள் இல்லை, ஆயினும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகாவைச் சேர்ந்த 50 வயது ஆடவர் வர்த்தக காரணங்களுக்காக அந்த ரோபோவை சோதித்துப் பார்த்ததாகக் கூறியுள்ளார். பாதசாரிகளுக்கு திகைப்போ அல்லது ஆபத்தையோ விளைவிக்காமல் கவனமாக அந்த இயந்திர மனிதனை கையாளுமாறு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
‘துக்க உணர்வோடு’ காணப்பட்ட அந்த ரோபா ‘கைதாகாமல்’, அங்கிருந்து காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது.

