தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சிக்கிய சிங்கப்பூரருக்கு உதவிய மாதுக்குக் குவியும் பாராட்டு

2 mins read
ce9fc113-44f1-41e6-aea4-a6565b7ebc4f
சித்திரிப்பு: - பிக்சாபே

இஸ்கந்தர் புத்திரி: மலேசியாவில் சாலை விபத்தில் சிக்கிய சிங்கப்பூரருக்கு விரைந்து உதவிக்கரம் நீட்டிய பெண்ணுக்குப் பொதுமக்களின் பாராட்டு குவிந்துவருகிறது.

தஞ்சோங் குபாங் சாலைச் சுங்கக் கட்டண முகப்புக்கு அருகே ஜனவரி 8ஆம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த மோட்டார்சைக்கிளோட்டி விபத்தில் சிக்கினார்.

சம்பவ இடத்திலிருந்த ஒருவர் அதுகுறித்துப் பின்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மாலை 6.40 மணியளவில் நடந்த விபத்தை அடுத்து இருவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“விபத்து எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த இடத்திற்கு நான் சென்றபோது, பாதிக்கப்பட்ட இருவர் சாலையில் கிடந்தனர். ஒருவருக்கு மோசமான காயங்கள் இல்லை. ஆனால், 68 வயதான சிங்கப்பூர் ஆடவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

வீடு திரும்பிக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் பலர், வாகனங்களை நிறுத்திவிட்டு உதவிக்கரம் நீட்டியதாகவும் வாகனங்களையும் அந்த இருவரையும் சாலை ஓரத்துக்கு அவர்கள் கொண்டுசென்றதாகவும் அவர் சொன்னார்.

“திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு பெண், ரத்தம் வழிந்தோடிய நிலையிலிருந்தவருக்கு உதவினார். நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. என் வாழ்வில் முதன்முறையாகக் கண்முன்னே தேவதையைப் பார்த்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் பதிவேற்றிய காணொளியில் சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் பாதிக்கப்பட்டவரின் முகம், கைகளில் வழிந்த ரத்தத்தைத் துடைப்பதைக் காணமுடிகிறது.

சம்பவத்தை நேரில் கண்டவரின் பதிவில், அப்பெண்ணின் கைககளிலும் ஆடைகளிலும் ரத்தக்கறை படிந்தபோதும் அவர் அமைதியாகக் காணப்பட்டதாகவும் தனது சொந்தத் தந்தையைப்போல் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ உதவி வாகனம் வந்த பிறகு அப்பெண் எங்குச் சென்றார் எனத் தெரியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்