சீனாவில் ‘ஏஐ’யைக் காதலிக்கும் பெண்கள்

சீனாவில் ‘ஏஐ’யைக் காதலிக்கும் பெண்கள்

2 mins read
98f0dd17-c7f7-4634-860a-9b59739de3e9
சீனத் தலைநகர் பெய்ஜிங். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதற்குப் பெண்கள் முன்னுரிமை தரவேண்டும் என்பது சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம்.

ஆனால், அந்நாட்டுப் பெண்கள் பலரோ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ‘சேட்போட்’ தளங்களுடன் காதல் கொண்டு வருகின்றனர்.

நாட்டின் மக்கள்தொகை சுருங்கி வருகிறது, பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக சீனாவின் மக்கள்தொகை குறைந்திருப்பது அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போக்கை மாற்ற சீன அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கும் ஏஐக்கும் இடையே வளர்ந்துவரும் காதல் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வெகுவிரைவில் சூடுபிடித்து வருகிறது. அதனால், மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிப் பழகுவதற்கு இணையான அம்சங்களை இலக்குகளாகக் கொண்டு செயல்படவேண்டாம் என்று அதிகாரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க நேரிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைச் சீன அரசாங்கம் சென்ற ஆண்டு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு இளையர்கள் பலர் திறன்பேசிக்கு ‘அடிமை’யாயினர். மக்கள் தங்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களையும் அச்சங்களையும் மெய்நிகர் ‘துணை’களுடன் பகிர்ந்துகொள்ள வகைசெய்யும் ஏஐ தளங்கள் பிரபலமடைந்தது அதற்குக் காரணம்.

இப்படியிருக்கையில், சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துவரும் போக்கை மாற்ற அந்நாட்டு அரசாங்கம் பல விதிமுறைகளையும் அனுகூலங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு அம்சங்களைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வரைவது, இதுபோன்ற தளங்களுக்குப் பெண்களை ஈர்க்கும் அடிப்படைக் காரணங்களைக் கையாள உதவாது என்று வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்