அங்காரா: பெண்களால் ஆட்சி செய்யப்பட்ட தாய்வழிச் சமூகம் வாழ்ந்த நகரம் ஒன்று, 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கக்கூடும் என்று சயன்ஸ் அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
130க்கும் அதிகமான எலும்புக்கூடுகளின் மரபணுவை ஆய்வாளர்கள், தென் துருக்கியிலுள்ள சாட்டோலிஹியுவெக் என்ற புராதன நகரிலுள்ள 35 வீடுகளிலிருந்து வெளிக்கொணர்ந்தனர்.
நகரின் மட்பாண்ட கற்களால் செய்யப்பட்ட வீடுகளுக்கு அடியிலுள்ள இடுகுழிகளில் 395 ஆண், பெண் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கிபி சுமார் 9,000 முதல் 8,000 வரை மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நகரம், அதன் பெண் வடிவ உருவச்சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது. அந்த வடிவங்கள், அச்சமூகத்தின் தெய்வத்தாய் வழிபாட்டையும் தாய்வழிச் சமூகத்தையும் குறிக்கும்.
அறிவியலாளர்கள், அகழாய்வாளர்கள், உயிரியல் மானுடவியலாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு, புத்தம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலும்புக்கூடுகளின் மரபணுக்களைக் கடந்த 12 ஆண்டுகள் ஆராய்ந்தனர்.
இல்லத்து உறுப்பினர்களை இணைப்பதில் தாய்வழி மரபுக்குப் பெரும் பங்கு இருப்பதும் இடுகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பண்டைய சமுதாயத்தில் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் கணவர்கள், தங்கள் மனைவியின் தாயகங்களுக்குச் சென்று வாழ்ந்திருக்கலாம் என்று அறிக்கை, மரபணு ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்தது.