வாஷிங்டன்: அளவுக்கு அதிகமான உற்பத்தி குறித்த பல மாத விசாரணைக்குப் பிறகு அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய வரிகளுக்குச் சீனா முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரையிலான முக்கியப் பொருளியல் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது நட்பு நாடுகளுடனும் போட்டி நாடுகளுடனும் புதிய வணிகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முந்தைய வரிகளை உச்ச நீதிமன்றம் பிப்ரவரியில் ரத்து செய்த சில நாள்களில் இவ்விரிவான விசாரணை தொடங்கப்பட்டது. 20 விழுக்காடுவரை விதிக்கப்படும் இந்தப் புதிய வரிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படும். தொடர்ந்து ஜனவரியில் வரி நடப்புக்கு வரக்கூடும்.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, பங்ளாதேஷ், கம்போடியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 14 வணிகப் பங்காளிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா, வியட்னாம் ஆகியவற்றிற்கு 20 விழுக்காடும், கம்போடியா, இந்தோனீசியாவிற்கு 18 விழுக்காடும், இந்தியாவிற்கு 17 விழுக்காடும் வரி முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, தைவான் ஆகியவற்றிற்கு வரி 15 விழுக்காடாகக் கட்டுப்படுத்தப்படும்.
தன்னிடம் மிகை உற்பத்தி இல்லை என ஜப்பான் மறுத்துள்ளது. வணிகப் போர்களில் ஈடுபட வேண்டாம் எனச் சீனா எச்சரித்துள்ளது. உள்ளூர்ச் சந்தையைப் பாதுகாப்பதாகவோ, உற்பத்திக்கு மானியம் வழங்குவதாகவோ கூறப்படுவதை மறுத்த சிங்கப்பூர், இம்முன்மொழிவுகள் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தது. 2025 ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்களுக்குச் சீனாவுக்கு விலக்கு அளிக்க முன்வந்துள்ளதாக அமெரிக்க வணிகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறினார்.
பிரேசில் பொருள்களுக்கும் கூடுதல் வரி முன்மொழியப்பட்டுள்ள நிலையில், மிரட்டலுக்குப் பணியமாட்டோம் என அந்நாடு தெரிவித்துள்ளது.
மின்கலன்கள் முதல் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் வரையிலான துறைகள் இதில் அடங்கும். ஏற்கெனவே முந்தைய வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் இப்புதிய வரிகளால் மேலும் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.
இதனிடையே, வலுக்கட்டாய உழைப்பு அல்லது துறைசார்ந்த வரிகளுடன் இப்புதிய வரிகள் சேர்த்து விதிக்கப்படாது என்றும் அதிக விகிதமே பொருந்தும் என்றும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
