தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு

1 mins read
d8fb1f69-9871-4f49-915d-f1ecac48a735
மே 24ஆம் தேதி நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னே இஸ்ரேலுக்கு எதிராகப் பதாகை ஏந்திப் போராடிய ஆடவர். - படம்: ராய்ட்டர்ஸ்

தி ஹேக்: காஸாவின் தெற்கு நகரமான ராஃபா மீதான ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஸா மீதான ராணுவத் தாக்குதலை எதிர்த்து தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் அனைத்துலக நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன், இதன் தொடர்பில் தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐநா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் ஏழு மாதங்களைத் தாண்டிவிட்ட நிலையில், ஐநா நீதிமன்றத்தின் உத்தரவு இஸ்ரேல் மீதான அனைத்துலக நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியிருந்த தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலை, குறிப்பாக ராஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில், ஐநா நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள தென்னாப்பிரிக்கா, ஐநா உறுப்பு நாடுகள் அதனை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, ஐநா நீதிமன்ற உத்தரவு தொடர்பில் மூத்த அமைச்சர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஆலோசனை நடத்துவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்