உலகக் கிண்ணம் பிரிவு ‘ஜி’ & ‘ஹெச்’: நான்கு ஆட்டங்களும் சமநிலை

உலகக் கிண்ணம் பிரிவு ‘ஜி’ & ‘ஹெச்’: நான்கு ஆட்டங்களும் சமநிலை

2 mins read
பிரிவு ‘ஜி’, பிரிவு ‘ஹெச்’ ஆட்டங்களின் முடிவுகள்
e0e2e6bf-26ea-4662-bd3a-b0124e2b9f34
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயினும் கேப் வெர்ட் அணியும் மோதின. - படம்: இபிஏ
multi-img1 of 2
Watch on YouTube

காற்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள், மகிழ்ச்சி, சோகம், ஆச்சரியம் போன்ற உணர்வுகளுடன் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

அந்த வகையில், உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் சில குழுக்களுக்கு வாழ்நாள் நினைவுகளை வழங்கியுள்ளன.

செவ்வாய்கிழமை அதிகாலை நடந்த ஆட்டங்களின் முடிவுகள்

நடப்பு ஐரோப்பிய ‘சாம்பியன்ஸ்’ விருதின் வெற்றியாளரான ஸ்பெயின் குழு ஹெச் பிரிவில் அதன் முதல் ஆட்டத்தில் ஆப்பிரிக்காவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான கேப் வெர்ட் அணியுடன் விளையாடியது. ஆட்டம் அமெரிக்க நகரான அட்லான்டாவில் நடந்தது.

அவ்வாட்டத்தில் பல இளம் நட்சத்திரங்களைக் கொண்ட ஸ்பெயின் எளிதாக வென்றுவிடும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்பெயினை எதிர்த்து மிகத் தைரியமாக களம் இறங்கியது கேப் வெர்ட் குழு.

மொத்தம் ஐந்து லட்சம் மக்களைக் கொண்ட கேப் வெர்ட், 46.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெயினின் தேசியக் குழுவின் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து ஆட்டத்தை 0-0 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டது.

குறிப்பாக கேப் வெர்ட் அணியின் கோல்காப்பாளர் வோசினா, ஸ்பெயினின் அனைத்து முயற்சிகளுக்கும் தடையாக அமைந்து மிக அபாரமாக கோல் புகாமல் தற்காத்தார்.

அதே ‘ஹெச்’ பிரிவில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்த சவூதி அரேபியாவும் உருகுவேயும் மோதிய ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் முற்பாதியில் 41வது நிமிடத்தில் சவூதி அரேபியா முதல் கோலை புகுத்தி அசத்தியது. 1930ஆம் ஆண்டிலும் 1950ஆம் ஆண்டிலும் உலகக் கிண்ணத்தை இருமுறை வென்ற உருகுவே, ஆட்டத்தின் 80ஆம் நிமிடத்தில் கோல் புகுத்தி போட்டியை முடித்துக்கொண்டது.

அமெரிக்காவின் சியெட்டல் நகரில் நடந்த பிரிவு ‘ஜி’யின் ஆட்டத்தில் பெல்ஜியம் எகிப்துடன் போட்டியிட்டது. அந்த ஆட்டத்தில் எகிப்து 20ஆம் நிமிடத்தில் முதல் கோலைப் போட்டு அதன் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பெல்ஜியம் குழுவோ ஆட்டத்தின் 60ஆம் நிமிடத்தில் எகிப்தின் ஆட்டக்காரர் முகம்து ஹனி தவறுதலாக சொந்த அணிக்கு எதிராக புகுத்திய கோலால் தப்பித்தது. அந்த ஆட்டமும் 1-1 என்று சமநிலையில் முடிவுற்றது.

மெக்சிகோவின் சீசர் நகரில் நடந்த அதே ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஈரானுடன் விளையாடியது. அந்த ஆட்டமும் 2-2 என்ற கோல் எண்ணிகையில் சமநிலையில் முடிந்தது. ஏழாம் நிமிடத்திலேயே நியூசிலாந்து முதல் கோலைப் போட, ஆட்டத்தின் 32ஆம் நிமிடத்தில் ஈரான் ஒரு கோலைப் புகுத்தி சமநிலைப் படுத்தியது. பிறகு 55ஆம் மீண்டும் நியூசிலாந்து இதன் இரண்டாம் கோலைப் போட்டு ஈரானைப் பின்தள்ளியது.

தளராது ஆடிய ஈரான் குழுவினர், 64ஆம் நிமிடத்தில் முகம்மது முஹெபி அடித்த கோலுடன் இறுதிவரை விளையாடிப் போட்டியைச் சமநிலையில் முடித்தனர்.

குறிப்புச் சொற்கள்