உலக சுகாதார நிறுவனக் கூட்டம்: தைவான் பங்கெடுப்பதைத் தடுக்கப் பார்க்கிறது சீனா

உலக சுகாதார நிறுவனக் கூட்டம்: தைவான் பங்கெடுப்பதைத் தடுக்கப் பார்க்கிறது சீனா

1 mins read
423927e1-908f-434f-8fb0-08653fef84f4
சீனாவின் எதிர்ப்பால், பெரும்பாலான அனைத்துலக அமைப்புகளில் தைவான் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.  - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்தரக் கூட்டத்தில் தைவான் பங்கெடுக்க அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா திங்கட்கிழமை (மே 11) தெரிவித்திருக்கிறது.

அந்தக் கூட்டம் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இருப்பினும் கூட்டத்திற்கு இடையே இடம்பெறவுள்ள மற்றச் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காகப் பேராளர் குழுவொன்றை அனுப்பப்போவதாகத் தைவான் கூறியது.

சீனாவின் எதிர்ப்பால், பெரும்பாலான அனைத்துலக அமைப்புகளில் தைவான் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெறும் தைவானைத் தனது சொந்த நிலமாகக் கருதுகிறது பெய்ஜிங்.

தைவான், அப்போதைய அதிபர் மா யிங் ஜியோவின் ஆட்சிக்காலத்தில், நிறுவனத்தின் உலக சுகாதாரச் சபையில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை கவனிப்பாளராகக் கலந்துகொண்டது. அவர் சீனாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வணிக, பயணத்துறை உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் நிலைமை மாறியது. 2017ல் இருந்து தைவான் பங்கெடுப்பதற்குத் தடைபோட்டது பெய்ஜிங். ‘ஒரே சீனா’ கொள்கைக்கு தைவானின் அப்போதைய அதிபர் சாய் இங் வென் அடிபணிய மறுத்தார். அதனால் பெய்ஜிங், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டங்களில் தைப்பே பங்குபெறுவதற்குத் தடையாய் இருந்தது.

தற்போதைய அதிபர் லாய் சிங்-தவும் திருவாட்டி சாயின் கொள்கையையே கடைப்பிடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்