சாவோ பாலோ: பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற அதிபர் தேர்தலின் இறுதிச்சுற்றில் இடதுசாரி அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார்.
வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்ததன் மூலம் அவர் நான்காவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
அந்த வெற்றியைப் பாராட்டிய உலகத் தலைவர்கள் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட அதிபருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களில் சிலரது வாழ்த்துச் செய்திகள் இங்கே இடம்பெற்றுள்ளன.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி: “கனடாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவு எங்களது பங்காளித்துவத்தின்கீழ் செழித்தோங்கியுள்ளது. முக்கியப் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இரு நாட்டு மக்களுக்கும் அதிக செழிப்பை ஏற்படுத்தவும் ஒன்றிணைந்து இந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம்.
பெரு அதிபர் கெய்கோ புஜிமோரி: “அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த ஜனநாயக வெற்றி நாளில் பிரேசிலிய மக்களுக்கு எனது மரியாதையையும் தெரிவிக்கிறேன்.
ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா: “நமது வட்டாரத்திற்குப் பொதுவான எதிரிகளும் பொதுவான சவால்களும் உள்ளன. நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது அடையக்கூடிய நன்மைகள் பல உள்ளன.
சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட்: “நான் இப்போதுதான் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் பேசினேன். சிலி மற்றும் பிரேசிலுக்கு இடையே ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது; பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் இப்பகுதியில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் திட்டப்பணிகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம்: “ஜனநாயகம் வெல்க, பிரேசில் மக்கள் வெற்றி பெற்றுவிட்டனர்,” என்று தெரிவித்துள்ளார்.
