மணிலா: செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (ஐஎஃப்ஆர்சி), காஸாவில் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மனிதநேயப் பொருள்களை எந்தத் தடையுமின்றி காஸாவிற்குக் கொண்டுசெல்ல வகைசெய்யப்பட வேண்டுமென்றும் மே 29 ஆம் தேதி அந்தக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரால் காஸாவில் மில்லியன்கணக்கானோர் பட்டினியால் வாடுகின்றனர்.
கடந்த ஏழு மாதங்களாக அங்குள்ள மக்கள் மனிதநேயப் பேரிடரால் அவதியுறுகின்றனர்.
இவ்வேளையில், “காஸாவில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தவும் உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதிக்கவும் உதவும் வண்ணம் அரசியல் தீர்வு தேவைப்படுகிறது,” என்று ஐஎஃப்ஆர்சி அமைப்பின் தலைவர் கேட் ஃபோர்ப்ஸ், மணிலாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
ராஃபாவிற்கு பிப்ரவரியில் சென்றிருந்தபோது அங்கு நிலைமை மிகக் கொடுமையாக இருப்பதைக் கண்டதாகத் திருவாட்டி ஃபோர்ப்ஸ் கூறினார்.
“அங்குப் போதிய எண்ணிக்கையில் வீடுகள் இல்லை. தண்ணீர், கழிவறை வசதிகள் இல்லை. மருத்துவமனையில் கருவிகள் ஏதுமில்லை. நான் அஞ்சியபடியே உணவுப் பற்றாக்குறையும் தற்போது ஏற்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த வாரயிறுதியில் காஸா சண்டை நிறுத்தப் பேச்சுகளை மீண்டும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.
இருப்பினும், இந்த வாரத் தொடக்கத்தில் பேச்சுகள் மீண்டும் தொடங்கும் என்று வெளிவந்த தகவலை ஹமாஸ் தரப்பு மறுத்தது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்கும்வரை போரைக் கைவிடப்போவதில்லை என்கிறது இஸ்ரேல்.
சண்டை நிறுத்தப் பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது குறித்து இருதரப்பும் ஒன்றையொன்று சாடுகின்றன.
“அனைத்துத் தரப்பு அரசாங்கங்களும் சண்டை நிறுத்தம் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் உதவிப்பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும்,” என்றார் திருவாட்டி ஃபோர்ப்ஸ்.

