இந்தோனீசியாவில் வெடித்த ‘இரண்டாம் உலகப் போர்’ குண்டு; ஐவர் மரணம்

இந்தோனீசியாவில் வெடித்த ‘இரண்டாம் உலகப் போர்’ குண்டு; ஐவர் மரணம்

1 mins read
9d2a35ea-d8a9-4f59-8b91-94b363b0b1df
சம்பவம் பாப்புவா வட்டாரத்தில் நிகழ்ந்தது. - படம்: தி வைப்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இரண்டாம் உலகப் போரின்போது விட்டுச்செல்லப்பட்டதாக நம்பப்படும் குண்டு வெடித்ததில் ஐவர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 20 பேர் காயமுற்றனர் என்று காவல்துறை திங்கட்கிழமை (ஜூன் 1) தெரிவித்தது.

சம்பவம் களேபரமாக இருந்துவரும் பாப்புவா வட்டாரத்தில் நிகழ்ந்தது.

மீன்பிடி கிராமம் ஒன்றில் ஸ்டில்ட் ஹவுஸ் எனப்படும் கோல்களுக்கு மேல் கட்டப்படும் மரக்கட்டையாலான வீட்டுக்குக்கீழ் அந்தக் குண்டு ஞாயிற்றுக்கிழமை (மே 31) வெடித்தது. வெடிப்புச் சத்தத்தைக் கேட்ட உள்ளூர்வாசிகள் பேரதிர்ச்சிக்கு ஆளாயினர். சம்பவ இடத்திலிருந்து கரும்புகை எழுந்தது.

கொம்பஸ் டிவி ஊடகம் வெளியிட்ட பதிவுகளில் இந்தக் காட்சிகள் தெரிந்தன. ஒன்பது வீடுகள் அழிந்துபோயின.

“இரண்டாம் உலகப் போரின்போது விட்டுச் செல்லப்பட்ட குண்டு அல்லது மோர்ட்டார் கருவிதான் இந்த வெடிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்ற சந்தேகம் அதிகம் உள்ளது,” என்று பாப்புவா காவல்துறைப் பேச்சாளர் காஹ்யோ சுக்கார்னிட்டோ ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆகக் கடைசி நிலவரப்படி மூவரை இன்னும் காணவில்லை. கண்டெடுக்கப்பட்ட பல உடல் உறுப்புகள் யாருடையவை என்று அடையாளம் காணப்படவில்லை.

லேசான காயங்களுக்கு ஆளான குறைந்தது 19 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்