உலகப் பயணத் தரவுகள் தளமான ஓஏஜி (OAG) வியாழக்கிழமை (ஜனவரி 15) வெளியிட்டுள்ள விவரங்களின்படி, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகள் எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் உள்ளது. மொத்தம் 42.6 மில்லியன் பயணிகள் அங்கிருந்து விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் பதிவானதைவிட மூன்று விழுக்காடு அதிகமாகும்.
உலகில் இயங்கும் விமான நிலையங்களில் ஆக பரபரப்பான தலைசிறந்த 10 விமான நிலையங்களின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஓஏஜி தளம் வரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருந்தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலையச் சாங்கி விமான நிலையம் மீண்டும் பெற்றுள்ளது. அனைத்துலக விமானப் பயணத் தடங்களில் இருந்த பயணிகளின்ள் இருக்கை எண்ணிக்கையை வைத்து இந்தத் தரவுகள் கணிக்கப்படுகின்றன.
துபாய் அனைத்துலக விமான நிலையம் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. மிக பரபரப்பான, பயணிகள் ஆக அதிக அளவில் பயணங்களைத் தொடங்கிய விமான நிலையம் என்ற பெருமையை 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாம் முறையாகத் துபாய் பெற்றுள்ளது.
அங்கு பதிவான பயணிகளின் இருக்கைகள் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு நான்கு விழுக்காடு அதிகரித்து 62.4 மில்லியனை எட்டியுள்ளது. அந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய அளவைவிட 16 விழுக்காடு அதிகமாகும்.
அது, இரண்டாம் இடத்தில் வந்த லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தைக் காட்டிலும் 13.5 மில்லியன் இருக்கைகள் அதிகமாகும்.
பெருந்தொற்று காலத்துக்கு முன்பு இருந்த அளவைவிட நான்கு விழுக்காடு அதிகரித்து லண்டன் விமான நிலையம் 49 மில்லியன் பயணிகளை 2025ல் பதிவுசெய்தது. மூன்றாம் நிலையில் தென்கொரியாவின் தலைநகரான சோல் இடம்பெற்றது. அதன் இன்சியோன் விமான நிலையம் 43 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது.
உலகிலுள்ள தலைசிறந்த 10 விமான நிலையங்களில் ஆண்டு அடிப்படையில் ஆக அதிக அளவில் 12 விழுக்காடு பயணிகள் வரவைக் கொண்ட ஹாங்காங் விமான நிலையம் இத்தரவரிசையில் 38.7 மில்லியன் பயணிகளுடன் எட்டாம் இடத்தையே பிடித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கு அடுத்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையமும் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையமும் முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களிலும் பிரான்சின் பாரிஸ் ஏழாம் இடத்திலும் உள்ளன. ஜெர்மனியின் பிராங்பர்ட், தோஹாவின் அஹமட் அனைத்துலக விமான நிலையங்கள் ஒன்பதாம் பத்தாம் நிலைகளில் வந்து தரவரிசையை முழுமை செய்தன.

