பெய்ஜ்ஜிங்: உலக அளவில் ஆக உயரத்தில் அமைந்திருக்கும் பாலம் சீனாவில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
பாலத்தைக் கட்டிமுடிக்க மூவாண்டுகள் ஆனதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
நாட்டின் தென்மேற்கே குவேஜாவ் மாநிலத்தில் அமைந்துள்ளது ஹுவாஜியாங் கிராண்ட் கேனியன் எனும் அந்தப் பாலம். அதே மாநிலத்தில் உள்ள இன்னொரு பாலத்தின் உயரத்தை அது விஞ்சிவிட்டது.
ஹுவாஜியாங் கிராண்ட் கேனியன் பாலம், ஆற்றுக்கும் குறுகிய பள்ளத்தாக்கிற்கும் மேலே 625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உயரமான இடங்களில் அமைந்த பாலங்களின் வரிசையில் ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த பெய்ப்பான்ஜியாங் பாலத்தைவிட அது 60 மீட்டர் அதிகம்.
பிரமாண்டமான அந்தக் கட்டுமானத்தில் வாகனங்கள் போய்வருவதை வானூர்திகளின் நேரடிக் காணொளி மூலம் அரசாங்க ஊடகம் ஒளிபரப்பியது. பாலத்திற்கு ஆதாரமாக விளங்கும் தூண்களின் ஒரு பகுதி மேகத்திற்குள் இருப்பதை அதில் பார்க்கமுடிந்தது.
புதிய பாலம் இரு பகுதிகளுக்கும் இடையிலான பயண நேரத்தை இரண்டு மணிநேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குக் குறைத்துள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறைத் தலைவர் ஷாங் யின் தெரிவித்தார்.
மலைகள் நிரம்பிய குவேஜாவ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பாலங்கள் இருக்கின்றன.
உலகளாவிய நிலையில் ஆக உயரத்தில் கட்டப்பட்ட நூறு பாலங்களின் பட்டியலில் கிட்டத்தட்ட பாதி, அந்த மாநிலத்தில்தான் அமைந்துள்ளதாகச் சீன அரசாங்கத்தின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கட்டுமானத்தைப் பொறுத்தவரை உலகின் ஆக உயரமான பாலம் பிரான்சில் அமைந்துள்ளது. மில்லாவ் எனும் அந்தப் பாலத்தினுடைய தூண்களின் உயரம் நிலப்பரப்புக்கு மேலே 343 மீட்டர்.